மாற்றம்
டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான்.
ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா லாஸ் வேகாஸ் போகலாமென்று டாம் ஏன் கூப்பிட்டான்?” ஒன்றும் புரியவில்லை. டாம் எப்பவுமே இப்படித்தான். ஒரு தடவை “அந்தப் புதிய பாலத்தைப் பார்த்து வருவோம் வா “ என்று அழைத்துச் சென்றான். அங்கே சென்று பார்த்தப் பின்பு தான் தெரிகிறது, அது பஞ்ஜி ஜம்பிங் [bungee jumping ] இடம் என்று. என்ன செய்வது, எல்லாக் கடவுளையும் வேண்டிக்கொண்டு குதித்துவிட்டு வந்தோம்.
ரஞ்சித் அவசரமாகத் தனது பெட்டியை உருட்டிக்கொண்டு டாம் வீட்டிற்குள் நுழைந்தான். “இப்ப என்ன லாஸ் வேகாஸ்? உன்னால இரண்டு நாள் லீவ் காலி.”. டாம் தனது பதட்டத்தை அடக்கிக்கொண்டு மெல்ல சொன்னான் “நானும் அஞ்சுவும் எங்க கல்யாணத்தை லாஸ் வேகாஸ்ல வச்சிருக்கோம்.”
ரஞ்சித் முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாடியது. சிறிது சுதாரித்துக்கொண்டு கேட்டான் “லாஸ் வேகாஸ்லயா? வேற இடமா கிடைக்கல? கல்யாணம் ஏதாவது ஹால்லயா? இல்ல ஏதாவது ஸ்லாட் மெஷின் முன்னாலயேவா?”
டாம் சிரித்திக்கொண்டே சொன்னான், “ஹாலெல்லாம் போரு மச்சி, ஏதாவது புதுசா செய்யணும். ஜாலியா, சிம்பிளா கல்யாணம் முடிச்சிட்டு ஊரைச் சுத்திப் பார்த்துட்டு வரணும். இது தான் எங்க ரெண்டு பேரோட ஆசையும்.”
ரஞ்சித் எதுவும் புரியாமல் “எந்தப் புரோகிதர் வந்து கல்யாணம் நடத்துவார். அந்த ஊர்ல கோயில் இருக்கான்னே தெரியாது. அஞ்சலியும் நீயும் சர்ச்சுக்குப் போய்க் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?”
“எந்த வருஷத்துல வாழற? இப்ப எல்லாம் ஒரு மெசேஜ் குடுத்தா நம்ம ஊரு கோயிலிருந்து புரோகிதர் எந்த ஊருக்கு வேணும்னாலும் வருவார். கோவிந்தா சாஸ்திரிகள் நாளைக்கு அங்க வந்து ஜாயின் பண்றேன்னு சொல்லிட்டார். இல்லனா skype மூலமா பண்ணலாம்னு நெனச்சேன்.”
ரஞ்சித்துக்கு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. “உங்க குடும்பத்துல எல்லோருக்கும் இதெல்லாம் சம்மதமா? எவ்வளவு பேருக்கு டிக்கெட் வாங்கியிருக்கே?”
டாம் சில்மிஷச் சிரிப்போடு சொன்னான் “நான் யாருக்கும் சொல்லல ..உங்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன். நீயே இவ்வளவு கேள்வி கேக்கறன்னா அவங்க எல்லாம் எவ்வளவு கேப்பாங்க? எவ்வளவு பேரு கிட்ட சொல்றது. அதான் அப்பறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். நீ மட்டும் தான் மாப்பிள்ளைத் தோழன்”
ரஞ்சித்துக்கு தமிழரசனைப் பற்றி நன்றாகத் தெரியும். இப்படித் தான் ஏதாவது வித்தியாசமாகச் செய்பவன். “சரி என்னமோ சொல்ற. ஆனா இந்தியாவுல இருந்து வந்து லாஸ் வேகஸ்ல திருமணம் செய்யற ஒரே தம்பதி நீங்கதான்.”
டாம், “இப்ப எல்லாம் இது சகஜமாப் போச்சுடா. யார் கிட்டேயும் சொல்லிடாதே. எல்லாம் முடிஞ்ச பின்ன facebookல போட்டுக்குவோம். சும்மா லைக்ஸ் பிச்சிக்கும். ஒண்ணும் புரியாத இந்த ஊர்க்காரர்களும் லைக்ஸ் போடுவாங்க.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது செல்ஃபோன் மணியடித்தது. டாம் எடுத்து “அம்மா, எப்படிம்மா இருக்கீங்க? நர்ஸ் நல்லா பார்த்துக்குறாங்களா?” எனச் சிறிது நேரம் பேசி முடித்தான்.
ரஞ்சித் “என்னடா, அம்மா கிட்ட நிஜமாவே சொல்லலையா? நாளைக்குக் கோவிச்சிப்பாங்கடா”
டாம், “அம்மா அந்தக் காலத்து ஆளு. இதைச் சொன்னா புரியாது. இந்தியாவுக்கு வா, எல்லாரையும் கூப்பிடுவோம்னு சொல்லுவாங்க.”
ரஞ்சித், “இருந்தாலும் இது டூ மச்” என்றான்
அவன் சொல்லி முடிப்பதற்குள், டாமின் செல்ஃபோன் மணி அடித்தது. அவன் எடுத்து ஸ்பீக்கரில் போட்டான். நன்றாகக் கத்திப் பேசினான் “ஹலோ குட்டி, எப்படி இருக்கடா? எங்க எனக்கு ஃபோன்லயே ஒரு கிஸ் குடு பாப்போம்?”
ஸ்பீக்கரிலிருந்து “Good Morning and Happy 60 birthday தாத்தா!” என்ற மழலைக் குரல் ஒலித்தது.
-பிரபு ராவ்