அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற முப்பத்தியொன்றாம் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்கத் தேர்தல் களத்தின் உஷ்ணத்தைச் சற்றுக் குறைத்தது அல்லது ஊடகக் கண்களின் பார்வைக் கூர்மையை மழுங்கடித்தது எனலாம்.
இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, இரண்டு வேட்பாளர்களும் அனல் பறக்க மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் மாதம், அரசியல் களத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகப் பரபரப்பின்றி கடந்து சென்றது.
இருப்பினும் அவ்வப்போது சில அதிர்வலைகள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமலோ, அல்லது அமெரிக்கா அதிகப் போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்திருந்தாலோ இந்த அதிர்வலைகள் சுனாமி அலைகளாக மாறியிருக்கக் கூடும்.
குறிப்பாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டானல்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளும், பேச்சுகளும் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. ஜூலை மாதக் கட்சி மாநாட்டில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குஷியில் தடாலடியாகப் பேசி வந்தார் அவர். அதனால் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் குடியரசுக் கட்சிக்கோ புலி வாலைப் பிடித்த கதையாக, அவரைப் பகைத்துக் கொண்டாலும் ஆபத்து அப்படியே ஓட விட்டாலும் ஆபத்து என்ற நிலை. சில மாதங்களுக்கு முன்பு டானல்டின் போட்டியால் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து “நான் இன்னமும் எனது காலை உணவு சீரியலில் பாலுக்குப் பதிலாக விஸ்கி ஊற்றிக் கொள்ளாத குறை தான்” என்று நொந்து கொண்ட கட்சியின் தலைவர் ரெய்ன்ஸ் ப்ரைபஸ் ஆகஸ்டில் எவ்வளவு விஸ்கி குடித்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய ‘கோல்ட் ஸ்டார்’ குடும்ப கெளரவத்தைப் பெற்றிருந்த, கிஃஜிர் கானின் மனைவி கஸாலா கானைப் பற்றிக் குறிப்பிட்டு அவரது மதம் விதித்த கட்டுப்பாடுகள் அவரை மேடையில் பேசமுடியாதவராகச் செய்துவிட்டது என்றது; போர்க்களத்தில் உயிரைப் பொருட்படுத்தாது வீரச் செயல்கள் புரிந்தமைக்காக அளிக்கப்பட்ட ‘பர்ப்பிள் ஹார்ட்’ பதக்கத்தை ஒருவர் பரிசளித்த போது, ‘எனக்கு நெடுநாட்களாகவே இது போன்ற விருதினைப் பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது.. ஆனால் இராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்திற்குப் போய்ப் பெறுவதை விட இது மிக எளிதான வழியாக இருக்கிறது” என்று கூச்சமின்றி அநாகரிகமாகச் சொன்னது; ஹிலரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தனது இஷ்டத்துக்குச் செயல்படுவார். பிறகு அவரைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது …இரண்டாவது சட்டத் திருத்த ஆதரவாளர்கள் (பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வது தனிநபரின் உரிமை என்ற திருத்தம்) நினைத்தால் எதுவும் செய்யக் கூடும் என்று பேசியது; கூட்டத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையின் தாயிடம், “எனக்கு குழந்தைகளை பிடிக்கும்.. குழந்தை அழுவதைப் பொருட்படுத்தாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடங்களில் ‘நான் சும்மா கிண்டலுக்காகச் சொன்னேன்.. தயவு செய்து அந்தக் குழந்தையை வெளியே தூக்கிச் செல்லுங்கள்” என்று சொன்னது; ஐசிஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர், தலைவர் அமெரிக்கத் தலைவர் ஒபாமா; துணைத் தலைவர் ஹிலரி என்று பேசிவிட்டு, பின்னர் அது சும்மா தமாஷுக்குச் சொன்னது என்று பின்வாங்கியது; அமெரிக்காவின் ரகசியங்களை ரஷ்யா முனைந்தால் கைப்பற்ற முடியும் எனப் பேசியது ; சிகாகோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, நீங்கள் (கறுப்பினத்தவர்கள்) எல்லோரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது – இப்படிச் சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேசியே, தானே சிக்கல்களை உருவாக்கி அதில் சிக்கிக் கொண்டார் டானல்ட் ட்ரம்ப்.
இதற்கு மாறாக ஹிலரி அமைதியாக, தான் ஏற்கனவே மாட்டிக் கொண்ட மின்னஞ்சல் சிக்கல்களிலிருந்து வெளிவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தங்களது ‘கிளிண்டன் ட்ரஸ்ட்’ க்காக பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, அதனால் ஏற்பட்ட சிக்கல்களின் ஆதாரங்களை மூடி மறைத்தது எனப் பல குற்றச்சாட்டுகளிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலும் தனது தேர்தல் செலவுகளுக்காகப் பணம் சேர்ப்பதில் முனைப்பாகச் செயல்பட்டார் ஹிலரி. இந்த மாதத்தில் மட்டும், தேர்தல் செலவுகளுக்காக 9௦ மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளார் அவர். இதனைக் கொண்டு கடைசி சில வாரங்களில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காகவும், ஊடக விளம்பரங்களுக்காகவும் அதிகம் செலவிட அவரது தரப்பு தயாராகி வருகிறது. இன்னமும் அவர் மீது சுமத்தப்பட்ட ‘நம்பிக்கையின்மை’ என்னும் பெரிய குற்றச்சாட்டை அவரால் துடைத்தெறிய முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஹிலரியை ‘கேடி’ என்று அடைமொழி (crooked Hillary) வைத்து டானல்ட் ட்ரம்ப் அழைப்பதில் ஓரளவு உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இரு வேட்பாளர்களின் பலம், பலவீன நிலைகள் என ஊடகங்களும் பொதுமக்களும் நினைப்பது;
டானல்ட் ட்ரம்ப்
பலம் :
– நேர்மறையான எண்ணம் (positive approach)
– அரசியல் நெளிவு சுளிவுகள் அற்றவர்
– அரசியல், கட்சி மரபு சிந்தனைகளை உடைத்தெறியும் வல்லமை
– மீண்டும் அமெரிக்காவை வல்லரசாக மாற்றுவோம் என்ற கொள்கை
– கட்சி சாராத பண பலம்
– சரியோ தவறோ, ஊடகங்கள் பின்தொடர்வது
பலவீனம் :
– இடம், பொருள் இல்லாமல் பேசுவது; முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது
– விசுக்கென கோபம் கொள்வது, முரட்டுத்தனம்
– சிறுபான்மையினர் (கறுப்பர், ஹிஸ்பானியர்) ஆதரவைப் பெற முடியாதது
– தீவிரவாத எண்ணங்களை உசுப்பி விடுவது
– வெளிநாட்டு உறவுகளில் அனுபவமின்மை
– அரசியல் நெளிவு சுளிவுகள் தெரியாமல் இருப்பது (இதுவே அவரது பலமும் கூட)
– கட்சியின் ஆதரவைப் பெற முடியாதது.
– பழமைவாத எண்ணங்களைப் புறந்தள்ளியது
ஹிலரி கிளிண்டன்
பலம்:
– முதல் பெண் வேட்பாளர்
– நீண்ட அரசியல் அனுபவம்
– வெளிநாட்டு உறவுகளில் அனுபவம்
– திடமான சிந்தனை, அச்சமின்மை, போராடும் குணம்
– கட்சிக்குள்ளும், சிறுபான்மை இனத்தவரிடமும் கொண்டுள்ள ஆதரவு
– பெரிய நிறுவனங்களின் ஆதரவு
பலவீனம்
– அவர் மீதுள்ள மின்னஞ்சல், பென்காசி களங்கங்கள்
– தந்திரவாதி, சந்தர்ப்பவாதி
– உண்மைகளை மறைப்பது
– பெரிய அளவில் தொலைநோக்குச் சிந்தனை இல்லாதிருப்பது
– பழமைவாத எண்ணங்களை உதாசீனப்படுத்துவது
– நீண்ட அரசியல் வாழ்க்கை
இவர்கள் இருவரும் இப்படித் தத்தம் சிக்கல்களில் திணறிக் கொண்டிருக்க,
கேரி ஜான்சன், டேரல் காஸல், ஜில் ஸ்டெய்ன் போன்ற சிறு கட்சி வேட்பாளர்களும் மெது மெதுவே பலம் பெற்று ஆதரவைத் திரட்டி வருகின்றனர். ஹிலரி, டானல்ட் இருவர் மீதும் பற்றும், நம்பிக்கையும் அற்றவர்கள் இறுதி வாரங்களில் இவர்களுக்கு ஆதரவாகத் திரும்பக் கூடும்.
இருப்பினும் இன்றைய நிலவரப்படி 76 சதவிதத்தினர் ஹிலரி கிளிண்டன், அமெரிக்காவின் அடுத்த அதிபர் என எண்ணுகின்றனர். ஆனால் நடந்து முடிந்த ப்ரைமரித் தேர்தல்கள் போல முடிவுகள் தலைகீழாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
– ரவிக்குமார்.
எது எப்படியோ பள்ளியில் 4 ம் ஆண்டு படிக்கும் என் மகள் “ட்ரம்ப் ஜெயித்து விட்டால் நாமெல்லாம் திரும்பி இந்தியா போய் விடவேண்டுமா அப்பா??” என்று கேட்டபோது பள்ளி வரை சென்று விட்ட அந்த சிந்தனையின் தாக்கம் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.