\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புத்தகம் சேகரிப்பது எப்படி?

book-storing

நவீனம் என்ற ரீதியில் பல மின்பலகைகள் (e-readers) தற்போது புழக்கத்தில் வந்திருப்பினும், கையில் புத்தக அட்டை இதழ்களை வருடி எங்காவது ஒரு மூலையில் இளைப்பாறி வாசிப்பதோர் தனிச்சுகம். பண்டைய தமிழ் வீடுகளில் மண் திண்ணையில் புல், ஓலைப் பாய், மர வாங்கினால் ஆன ஊஞ்சல் மஞ்சம், மினசோட்டா மாநிலத்தில் கோடைகாலத்தில் வலையிலான தூங்கு மஞ்சம், அல்லது குளிர்காலத்தில் மெத்தை தைத்த ஆசனம் இவற்றிலெல்லாம் தரித்து வாசிப்பதோ மற்றொரு சுகம்.

இந்த உடல் உள இளைப்பாறலைத்தரும் அச்சுக் கோர்வைப் புத்தகங்கள் மற்றும் உங்களிற்குப் பிடித்த கதை,கட்டுரை, கற்பனை ஏடுகளைப் பல காலம் பேண வேண்டாமா? அதற்குச் சில கைமுறைகளைப் பார்ப்போம்.

சரியான சூழல்

புத்தகங்கள் காகிதத்தினால் ஆக்கப்பட்டவை. அவற்றின் கோர்வைகள் (binding) காலச் சூழலினால் பாதிக்கப் படக்கூடியவை. குறிப்பாக வெப்ப, தட்பம், அதி ஈரப்பதன் புத்தகப் பக்கங்களின் இயற்கை உருவை மாற்றிக் கோணலாக்கலாம். இதை விட மினசோட்டாக் கால நிலையில் புத்தகப் பூச்சிகள், மற்றும் உக்கல் படிமங்கள் (mold growth) உருவாகவும் வழியுண்டு. எனவே அன்றாட உபயோகத்திற்கும் அல்லது நீண்டகால சேகரிப்புக்கும் ஈரப்பதன் கூடிய, நீர் தரிக்கக் கூடிய, அல்லது வெள்ளம் வரக்கூடிய இடங்களில் இருந்தும் புத்தகங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக வெப்பமும், சூரிய ஒளியும், குறைந்த காற்றோட்டமும் காதிதப் புத்தகங்களுக்குப் பார தூரத்தையும் தரலாம்.

எனவே அச்சுப் புத்தகங்களைச் சேகரிக்க சுமார் 60-65 F/15-19 C வெப்பத்திலும் ஈரப்பதன் சராசரியாக 45-60 சதவீதம் வைத்திருந்தால் அச்சுப்புத்தக ஆயூளை நீடிக்கலாம். புத்தகங்களை நிலக் கீழ் அறை, வாகன தரிப்பிடம், வாழ்விடம், சமையல் அறை போன்ற இடங்களில் வைத்திருக்க விரும்பினால் நிலத்திற்கு அருகாமையில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஈரப்பதன் கூடிய இடங்களில் அதை தணித்துக்கொள்ள dehumififier வைத்துக்கொள்ளலாம்.

அதே சமயம், சமையல் குறிப்புகள், கட்டுக் கதைகள் பரம்பரை பரம்பரையாக உங்கள் கையில் வந்திருப்பின் அவற்றைப் படமெடுத்துப் பிரதிகளை உபயோகத்தில் வைத்தும், அசல் புத்தகங்களைச் சேகரிப்பில் வைத்துக்கொள்வதும் நல்ல விடயமே.

உங்கள் புத்தகங்களைப் பேணல்

புத்தக அலமாரி வாங்கும் போது உலோகத்தில் வாங்குவது சிறப்பு. இரண்டாவது மினசோட்டாவில் மரப்பலகையினால் ஆன அலமாரிகள் சில சமயம் காலா காலத்தில் அவற்றில் கசியும் எண்ணெய் மற்றும் அமிலங்களினால் புத்தகங்கள்பாதிக்கப் படுவது உண்டு. ஏற்கனவே மரத்தாலான அலமாரிகளை புத்தகச் சேகரிப்புக்குப் பாவிப்பீர்களானால் அவற்றின் பலகைகளுக்கும் புத்தகங்களிற்கும் இடையே ஒன்றையொன்று தொடாமல் இருக்க கண்ணாடி, அக்ரிலிக் (Acrylic) மற்றும் பிளாஸ்டிக் (plastic)மடல்களைப் பாவித்துக் கொள்ளலாம்.

புத்தகங்களை அலமாரியில் நெருக்கி வைப்பது ஆகாது. காதிதங்களினூடு காற்றோட்டம் இருப்பது அவை நிலைத்திருக்க அவசியம். மேலும் இடைக்கிடை துணி அல்லது தூரிகையினால் தூசி தட்டுதலும் நன்று. பழைய முக்கிய புத்தகங்களைக் கைகளைக் கழுவி விட்டு பக்கங்களைப் புரட்டலாம். காரணம் எமது கையில் எண்ணெய்ச் சுரப்பிகள் உண்டு அவை அகற்றப்படாவிடின் பழைய காகிதங்களைப் பாழாக்கவும் செய்யும். எனவே துப்பரவான கை எமக்கு முக்கியமான நூல்களிள் ஆயுளைக் கூட்ட உதவும்.

நீண்டகாலப் புத்தகச் சேகரிப்பு

புத்தகங்களைச் சேகரிக்க செலவுகுறைந்த அட்டைக் காகிதப் பெட்டிகள் வாங்கிக்கொள்ளலாம். ஆயினும் தூக்கிப் பறித்தல் மற்றும் எலி, தீ போன்றவற்றில் இருந்து காகித அட்டைப் புத்தகங்களைப் பாதுகாக்காது. பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் (Plastic containers) நீண்ட காலச் சேகரிப்புக்கு உதவும். Plastic மூலகத்தினால் ஆன பெட்டிகளில் polyethylene, polypropylene, or polyester (polyethylene terephthalate or PET) பாவிப்பது புத்தகத்தின் ஆயுளைக் கூட்ட உதவும்.

புத்தகங்களை நிற்க அல்லது படுக்க வைத்துச் சேகரிக்கலாம். நீண்டகாலச் சேகரிப்புக்கு ஒவ்வொரு புத்தகத்தையும் அவற்றின் பக்கங்களில் ஏதாவது உணவுப்பண்டங்கள், அமிலங்கள் கூடிய இடுக்கு மட்டைகள், உலர்ந்த பூக்கள் போன்றவற்றை அகற்றிச் சேகரித்துக்கொள்ளவேண்டும். இதனுடன் விரும்பினால் பாலியெஸ்டர் உறைகளையும் போட்டுச் சேகரித்துக் கொள்ளலாம்.

-யோகி அருமைநாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad