மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?
தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் .
“குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”.
“ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?”
“அவன் தூங்கறான். ஒரு அரைமணி நேரத்தில எழுந்துருவான். சாயங்காலம் எப்போ வருவீங்க ? “.
“5 மணிக்கு வந்துடுவேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே,வெளில போய் சாப்பிடலாம்.”
“மூணு நாளா வெளில தானே சாப்டீங்க? இன்னிக்குமா ? வீட்ல ஏதாவது பண்ணறேன் “.
“வேண்டாம் வேண்டாம் வெளில போலாம். சரி நீ இன்னிக்கு என்ன பண்ற?”
“பிரணவ் ட்ராப் பண்ணிட்டு ஆபீஸ் போகணும், வேலை, அப்புறம் நடுவில பேங்க் க்கு போகணும். அப்புறம் அவனை பிக் அப் , கராத்தே அவ்வளவு தான்”. அவளது தினத்தை மனத்தில் ஓட்டியபடி அவனுடன் பேசினாள் .
“பேங்க் வேலை என்ன? “
“செக் ஒண்ணு போடணும்“.
“அதுக்கு எதுக்கு நேரா போகணும். போன்ல படம் எடுத்து லோட்(Load) பண்ணு”.
“எல்லாத்துக்கும் app வந்தாச்சு. மனுஷங்களோட எப்ப தான் பேசுவோம் நாமெல்லாம். நேத்து பிரணவ் அப்படி தான் பிட்சா ஆர்டர் பண்ண வெறுமனே ஆப் ல மெசேஜ் போடுன்னு சொல்றான். இப்படியே போனா உலகம் என்ன ஆகும்? காந்தியடிகள் சொன்ன மாதிரி எளிமையான வாழ்க்கை எப்போ திரும்ப வரும்?”
“பாரு என்கிற பாரதி. நிறுத்து!! நிறுத்து!!. உனக்கு புதுமைக் கவிஞரோட பேர். ஆனா பேச்சு என்னவோ ரொம்பப் பழமை.
“இல்ல வாசு “.
“அம்மா தாயே!! உலகமே எலெக்ட்ரோனிக்கலா ஓடுது. நீ மட்டும் இன்னும் என் இப்படி?. காலங்காத்தால ஆரம்பிக்காதே. என்ஜாய் யுவர் டே, சாயங்காலம் பார்க்கலாம்”.
வழக்கம் போலவே வாசு பேசி விட்டு ஃபோனை அமுத்தி விட்டான்.
பாரதி இளகிய மனசு கொண்டவள். உலகத்தில் எது நடந்தாலும் அது தனக்கே நடந்தது போல வருத்தப்படும் குணம் கொண்டவள். கல்லூரி படிக்கும் பொழுது வெளி வந்த சேது படம் பார்த்து படம் முடிந்த அப்புறம் பத்து நாள் ஜுரம் வந்து படுத்தே விட்டாள் . அவளுக்கு நேரெதிர் வாசு. ரொம்ப நல்லவன் ஆனா ரொம்ப நடைமுறை வாதி. இவளுடைய உணர்ச்சிகள் அவனுக்கு வேடிக்கையாகவே இருக்கும். கவிதைகளும் கதைகளும் என வளர்ந்த அவளால் வெறும் வியாபாரமாகச் சிந்தனைகளை வளர்க்க முடியவில்லை.
ஒரே உணர்வுகளின் பகிர்தலை சில சமயங்களில் இழந்தது போல உணர்வாள். ஆனால் இருவரும் ஒரே மாதிரி உணர்ச்சி யான மனிதர்களாக இருந்தால் குடும்பத்தில் சம நிலை இருக்காது தானே.
“இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற கண்ணதாசன் பாடல் மனதில் வந்து போனது.
பிரணவ் எழுந்து கிளம்பினான். அவனை அனுப்பி விட்டு இவளும் ஆஃபீஸ்க்கு கிளம்பினாள். வழக்கம் போல வழி எல்லாம் டிராஃபிக்.
எல்லோரும் ஒரு கண்ணில் டெலிஃபோனைப் பார்த்தபடி இன்னொரு கண்ணை வழியில் வைத்தபடி பதட்டத்தோடு நகர்ந்தார்கள். முழுக்க முழுக்க உலகமே இயந்திரங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு. ஒரு பக்கம் இந்த வளர்ச்சி தேவை என்று தோன்றினாலும் இன்னொரு பக்கம் ரொம்ப வேகமாக ஆகி வரும் இயந்திர மயமாக்கம் மனித உழைப்பின் மகிமையை இழப்பது போலவே இருக்கிறது.
எல்லா இயந்திரங்களும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பூதம் போல மேலே எழும்பி உலகத்தையே விழுங்கி விட்டது போல பாரதிக்கு தோன்றியது.
தலையை உலுக்கி, சிந்தனையை அகற்றி அன்றைக்குச் செய்ய வேண்டிய பணியில் மனதைச் செலுத்த முயன்றாள்.
வண்டியை பார்க்கிங் கீழ் நிறுத்தி விட்டு, அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினாள். வழக்கமாக அவள் பார்க்கிங்கில் நிற்கும் செக்யூரிட்டி காணவில்லை. அவருக்குப் பதில் ஒரு தானியங்கி நின்று அவளை மறித்தது.
மீண்டும் இயந்திரம் ,
மனிதர்களின் இன்முகமும் சிரிப்பும் இனி எங்கு இருக்கும்?
இயந்திரங்கள் தான் உலகைப் பாதி விழுங்கி விட்டனவோ?
மீதி மனிதர்கள் ஏற்கனவே நடைப் பிணம் தானோ?
இப்படியே போனால் நாளைய தலைமுறை என்ன வாகும்?
பிரணவ் போன்ற குழந்தைகள் மனிதர்களைப் பார்த்து பேசுவார்களா, மாட்டார்களா?
உணர்ச்சிகள் அதிகம் பொங்கி அழுகை வரும் போல இருந்தது பாரதிக்கு.
தன்னுடைய சிந்தனையை நினைக்கையில் ஏதோ பைத்தியம் பிடித்தது போலத் தோன்றியது.
மீண்டும் தலையை உலுக்கி சிந்தனையைக் கலைத்து தெருவில் நடக்கத் தொடங்கினாள்.
“Walk” என நடைபாதையில் மாற ஆவலுடன் நடந்த மனிதர்கள் அனைவரும் ஏதோ ரோபோ போல நடந்தார்கள். பலர் கையில் கைபேசியைப் பார்த்தபடியே, சிலர் காதில் பேசியபடியே, சிலர் பாட்டுக் கேட்டபடி.. ஒருவர் முகத்திலும் ஜீவனே இல்லை போன்று தோன்றியது பாரதிக்கு. அவ்வளவுதான் அந்தத் தெருவைக் கடந்து முடித்த பொழுது இயந்திர பூதம் மேலே வந்து அழுத்தியது போலத் தோன்றியது.
முற்றும் இருட்டியது. தடால் என்று சரிந்தாள்.
*****
கண் விழித்துப் பார்த்த பொழுது மருத்துவ மனையில் இருந்தது புரிந்தது. இவளுடைய அலுவலக சிநேகிதி லிசா அருகில் இருந்தாள் . அவசர அழைப்பு என்று அவளைக் கூப்பிட்டிருப்பார்கள் போல.
கண்களில் இரக்கத்தோடு அவள் ” எப்படி இருக்கிறாய் ?” என வினவ,
வெட்கமாக இருந்தது பாரதிக்கு. ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கா மயக்கம் போட்டு விட்டோம்.
சொன்னால் எல்லாம் சிரிப்பார்கள்.
“You had anxiety attack”. அதிக மன அழுத்தம் காரணமாக ஏற்பட்டது.
வீட்டில் எதுவும் பிரச்சனையா ? என்று வரிசையாக எல்லாரும் கேள்வி கேட்க .
என்ன பதில் சொல்ல ?
உலகக் கவலையில் மயங்கினேன் என்றா?
இப்படி வளர்ந்து வரும் இயந்திர மாயா மயக்கம் கண்டு பயந்தேன் என சொல்வதா?
எதிர் கால தலைமுறை ரோபோ மாதிரி ஆகி விடுவார்களோ என பயந்தேன் எனச் சொல்வதா?
இதை எல்லாம் மனதில் உழன்று மயங்கும் அளவு வருந்தினேன் என்ற நினைப்பே வெட்கமாக இருந்தது. எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள் பாரதி. ஏர்ப்போர்ட்டில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தான் வாசு. பிரணவ்வையும் வாசுவையும் பார்க்க பயமும் கலந்தது.
டாக்டரும் , லிசாவும் வாசுவுக்கு இவளுடன் அதிக நேரம் செலவிடும் படி பெரிய அறிவுரை வழங்க, அவனுடைய தர்ம சங்கட மனோ நிலைமையைப் புரிந்து கொண்டாள் பாரதி.
இவள் எதற்காக உண்மையில் மயங்கினாள் என்று சொல்ல முடியவில்லை . ஏதோ தனியாக இருந்ததால் ஸ்ட்ரெஸ் ஆகி விட்டாள் என்று முடிவு செய்து ஒய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி வாசுவுக்கு ட்ராவல் குறைக்குமாறு போதனை செய்து இவளை ஒரு மாதிரி வீட்டிற்கு அனுப்பினார்கள்.
*****
ரெண்டு மூன்று நாட்கள் வாசு வீட்டில் இருந்து மிகுந்த அக்கறையோடு பார்த்து கொண்டான் . அவன் ஏதோ தப்பு செய்தது போல வருந்தினான்.
நடைமுறை வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பி அலுவலகம் செல்லத் தொடங்க, லிசா இவளைப் பார்த்து ,
“இப்பொழுதைய கால கட்டங்களில் எல்லோரும் தெரபிஸ்ட் வைத்துக் கொள்வது நல்லது. நம்முடைய மனச் சங்கடங்களை ஒரு பரிமாற்றத்திற்காக வேண்டும். எப்பொழுதும் நண்பர்களிடம் சொல்வது ரகசியமாக இருப்பதும் இல்லை. அவர்களுக்கு நம் மனவோட்டம் புரிவதும் இல்லை ” என்று சொல்லியபோது மீண்டும் வலித்தது.
மனிதர்களுக்கு நட்பில் கூட நம்பிக்கையின்றியே போய் விட்டது.
மனச் சிந்தனைகளுக்கு என்ன தான் வெளிப்பாடு?
வேகமான இயந்திர வாழ்க்கை நாளை எங்கு போய் முடியும்?
மீண்டும் மனம் சுழற்சி செய்தது.
அன்று இரவு இவளுடைய தெரபிஸ்ட்க்கிற்கு ஃபோன் செய்தாள். அவளுடைய அம்மாவிற்குத் தான். கவலைப் படுவார்களோ என்று தான் மயங்கியதைச் சொல்லாமலே வைத்திருந்தாள் . ஆனால் அன்று அழைத்து எல்லாவற்றையும் சொன்னாள் .
“பைத்தியம் மாதிரி இதுக்குப் போய் மயக்கம் போட்டு விழுந்து ஊரைக் கூட்டிட்டேன் . இவர் வேற பாவம்“.
அமைதியாக அம்மா உரைத்த பதிலில் தான் என்ன தெளிவு,.
“பாரதி உனக்கு அந்த பேர் வெச்சதோ என்னமோ உனக்குத் தன் வீடு , தன் குழந்தை என்ற சிந்தனை தாண்டி உலகச் சிந்தனை இருக்கு . அதுக்கு முதல்ல பெருமைப்படு. வெட்கப்படாதே . உன்னோட சிந்தனைக்கு ஒரு ஆக்கப் பூர்வமான வெளிப்பாடு வெச்சுக்கோ. என்னோட பகிர்தலில் ஏற்படற தெளிவு விட அந்த வெளிப்பாட்டில உனக்குத் தெளிவும் உண்மையும் கிடைக்கும்“.
“என்ன வெளிப்பாடு அம்மா . அழறத தவிர .. உலகத்தை மாத்த முடியுமா என்ன? “
“பாரதிங்கிற பேரு உனக்கு வெச்சதே அந்த கவித்துவத்தை உணரத்தான். எவ்வளவு படிப்பே , எழுதுவே நீ ? உலகத்தை மாத்த ஒவ்வொரு வார்ததைகளும் போதுமே..எழுத்துல கிடைக்கிற வெளிப்பாடு வேறு எதுல கிடைக்கும் சொல்லு!!. பேச்சும், எழுத்தும், கவிதைகளும் காலத்தை மீறிய சிந்தனையின் வெளிப்பாடுகள் .
இன்னைக்கும் ஒரு மார்ட்டின் லூதர் கிங்கின் பேச்சு “Now is the time to raise from the dark” என்று கேட்டால் நமக்குள் உணர்ச்சி பொங்குவதில்லையா ?
வீட்டை நினைப்பாரோ?-அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
என்று பாரதி எழுதும் பொழுது அழுகை பொங்குமே!!!.
உன்னுடைய உயரிய உலகச் சிந்தனைக்கு ஒரு அழகான வடிவம் கொடு. அந்த வடிவம் காலம் கடந்து நிற்கும்.
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ?-மாயையே!
உன்னோட அந்த சிந்தனைத் தெளிவுக்கு வித்தாகும் உன் எழுத்து.
நீண்ட நேர அம்மாவின் பேச்சு காதில் ரீங்காரமிட்டது. எத்துணை உண்மை அதில்!!
மன நோய்க்குப் பெரு மருந்து வேறு என்ன?
பேனா எடுத்தாள்
“மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனியுண்டோ?
மானுடத்தின் மகத்துவத்தை உணர வழியுண்டோ?
மண்ணோடு உறவாடும் நாட்கள் வரும் என்றோ?
மாசில்லா உலகமொன்றில் வாழ வழி உண்டோ?
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனியுண்டோ?
பழகிய கைகள் கவிதை புனைய மனக் குழப்பம் வடிவு கொண்டது. இயந்திரங்கள் மறந்து இனி உலகம் எளிமையாக ஒவ்வொரு சிந்தனையும், ஒவ்வொரு சொற்களும் அடித்தளமே!!.
–லட்சுமி சுப்பு
Very nice story .. well naratted
Reflects the real life, very good one!
Good and nice one
மிகவும் அழகான பதிவு
Nice Story
Beautiful narration by Lakshmi. Would love to read more .congrats – Vidya