\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

election2016_october_620x444கடந்த சில வாரங்களாக, ஏணிகளும், பாம்புகளும் கொண்ட பரமபத விளையாட்டைப் போன்று அமைந்திருந்தது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களின்  நிலை. இந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதியில், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகவும், இந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என்றும் முடித்திருந்தோம். செப்டம்பர் மாத மத்தியில் நிலைமை மாறி, டானல்ட் ட்ரம்ப் வெகுவாக முன்னேறி, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியிருந்தார். பின்னர் நடந்தேறிய சில சம்பவங்கள் இந்நிலையை மாற்றிவிட, இக்கட்டுரை எழுதப்படும் நாளன்று டானல்ட் 11  புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 26ம் தேதி வேட்பாளர்களுக்கான முதல் விவாதம் நடைபெற்ற நாளன்று வரை ட்ரம்ப் வெற்றி பெறக் கூடும் என்ற நிலையே இருந்தது.  இவர்கள் இருவருக்கும் மாற்றாக இருப்பார் என்று எண்ணிய, லிபர்டேரியன் கட்சி சார்பில் போட்டியிடும் கேரி ஜான்சன், செப்டம்பர் மாதத் துவக்கத்தில், தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஒருவர்,  ‘அலெப்போ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு நம்மூர் வடிவேலு பாணியில், ‘அலெப்போவா? அப்படீன்ன்னா?’ என்ற ரீதியில் கேட்டு அதிர்வலையை எழுப்பிருந்தார். கஷ்டமோ –  நஷ்டமோ , வத்தலோ –  தொத்தலோ,  ட்ரம்ப் அல்லது ஹிலரி தான் என்ற நிலைக்கு வாக்காளர்கள் வந்து விட்டிருந்தனர். அதனால் இருவருக்கும் இடையில், புள்ளியளவில் பெரிய வித்தியாசம் இல்லாத நிலையிருந்தது.

முதல் விவாதத்தில் ட்ரம்ப், ஹிலரியின் தவறுகள்  குறித்த  பல முக்கிய தகவல்களை வெளிக் கொணர்ந்த போதும் அதை வெளிப்படுத்திய விதம் ‘அரசியல் நாகரீகம்’ என்ற மெல்லிய எல்லைக் கோட்டைத் தாண்டி அமைந்திருந்தது,  அதிபர் பதவிக்கு இவர் பொருத்தமானவர் தானா என்ற கேள்வியை எழுப்பியது. உலகில் மிகவும் போற்றத்தக்க பதவியில் அமரும் ஒருவர் எளிதில் உணர்ச்சி வசப்படாமல், கோபம் கொள்ளாமல் இருத்தல் அவசியம். ட்ரம்ப் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

அந்தச் சமயத்தில் (அவரது வரி ஏய்ப்பு பற்றிய தகவல்கள் வந்திருக்காத நிலையில்), அதைப் பற்றி கேள்வி எழுந்த போது, ‘ஹிலரியை முதலில்  அந்த முப்பதாயிரம் மின்னஞ்சல்கள் பற்றிய விவரங்களைச் சொல்லச் சொல்லுங்கள் நான் எனது வருமானம், வரி கட்டிய விவரங்களைத் தருகிறேன்’ என்று சொன்னது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. அதற்குச் சில  நாட்களுக்கு முன்னர், ஹிலரியின் நிமோனியா நோய் பற்றிக் குறிப்பிட்டு, ஹிலரி நோய்வுற்ற நிலையில் எப்படி நடந்தார், விழுந்தார் என மேடைகளில் ஓரங்க நாடகமாக நடித்துக் காட்டி தனது அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டியிருந்தார் ட்ரம்ப்.

மாறாக விவாதத்தில், ஹிலரி  தனது பல வருட அரசியல் முதிர்ச்சியால், ட்ரம்பின் சில அதிரடிக் கேள்விகளுக்கு நேரடிப்பதில் அளிக்க முடியாத போதும், முகத்தில் பதட்டமோ, கோபமோ இன்றி, புன்னகையுடன்  ஒரு மாதிரியாகப் பேச்சைத் தொடர்ந்தார். தருணம் பார்த்து அவர் அலிசியா மச்சாடோவின் பெயரை  உச்சரித்த போது, அதைச் சற்றும் எதிர்பார்க்காத ட்ரம்ப் ‘எங்கிருந்து இந்தத் தகவல்கள் வந்தன?’ என்று கேட்டுப் பத்திரிகைகள் தமக்கு எதிராகச் செயல்படுவதாகக் கொட்டித் தீர்த்தார். முதல் விவாதத்தில் இரு வேட்பாளர்களின் பலம் புரிந்ததோ இல்லையோ, அவர்களுடைய  பலவீனங்களும், தவறுகளும் குறைபாடுகளும் நன்றாகவே வெளிப்பட்டன.

அக்டோபர் இரண்டாம் நாளன்று டைம்ஸ் பத்திரிகை, ட்ரம்பின் 1995 ஆண்டுக்கான வருமான வரிப் படிவங்களின் முதல் மூன்று பக்கங்களை வெளியிட்டிருந்தது. அதில் அவர் 916 மிலியன் டாலர்களை நஷ்டமாகக் காட்டியிருந்ததைக்  குறிப்பிட்டு அதனால் பல வருடங்கள் அவர்  வருமான வரி விலக்குப் பெற்றிருக்கக் கூடும் என்ற தகவலை வெளியிட்டிருந்தது. ட்ரம்ப் தரப்பினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது இது.  அவரது அதி தீவிர ஆதரவாளர்கள் , ‘அது குற்றமல்ல ; எப்படி வரி கட்டுவதைத் தவிர்ப்பது என்பதை அறிந்த புத்திசாலி அவர்’ என்று விளக்கமளித்தனர்.

அடுத்த சில நாட்களில் மற்றொரு பேரதிர்ச்சியாக, ட்ரம்ப், 2005ம் ஆண்டு ‘ஆக்சஸ் ஹாலிவுட்’ தொகுப்பாளர் பில்லி புஷ்ஷிடம், பெண்களைக் கவர்வது எப்படி என்று மிகக் கொச்சையாக, இழிவாகப் பேசியிருந்த காணொளி வெளியானது. பெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர் நாட்டை ஆளத் தகுதியில்லாதவர் என்ற எதிர்ப்பலைகள் கிளம்பின. கட்சிக்கு அவப்பெயர் நேர்ந்து விடாமலிருக்க, குடியரசுக் கட்சியின் எஞ்சியிருந்த பெருந்தலைகள் பலர், வெளிப்படையாக அவருக்கான  தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளத் துவங்கினர். கட்சியில் கண்டிப்பாக வேறொருவரை முன்னிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் இதற்குள் சில மாநிலங்களில் முன் வாக்குப்பதிவும், இராணுவத்தில் பணி புரிவோர் மற்றும்  நேரில் வர முடியாதவர்களுக்கான அஞ்சல் வழி  வாக்குப் பதிவும் துவங்கி விட்டிருந்தன. தானாக விலகிக் கொண்டால் ஒழிய தான் தான் வேட்பாளர் என்பதை உணர்ந்த ட்ரம்ப் புகுந்து விளையாடத் துவங்கினார்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இரண்டாவது விவாதத்தில் பங்கேற்றார் ட்ரம்ப். விவாதத்தில் முதல் சில நிமிடங்கள் தனது பேச்சுக்காக வருந்திப் பேசினார். பின்னர் அதிரடியில் இறங்கியவர்  ‘பில் கிளிண்டன் பதவியில் இருந்த போது பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். ஹிலரி அப்பெண்களிடம் மல்லுக்கு நின்று சண்டை போட்டார்; ஹிலரி வழக்கறிஞராக இருந்த போது கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடி விடுதலை வாங்கித் தந்தார்’ எனப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். மத்திய அரசின் வருமான வரி கட்டாமல், அதே சமயம் வருமான வரிச் சட்டங்களை மீறாமல் இருந்தது தனது சாமர்த்தியம் என்றும், அதே சாமார்த்திய தனத்துடன் அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்;  பல ஊழல் குற்றங்களைப் புரிந்ததற்காக ஹிலரி மீது சிறப்பு வழக்குத் தொடுத்து, அவரை  ஜெயிலுக்கு அனுப்புவேன் என்றும் அறைகூவல் விடுத்தார். தனக்கு ஆதரவு தெரிவிக்காமல் பின் வாங்கிய குடியரசுக் கட்சித் தலைவர்களைப்   பற்றி குறிப்பிடுகையில், ‘யார் ஆதரவளிக்காமல் போனாலும் எனக்குக்  கவலை இல்லை. பாரம் குறைந்தது என நினைத்துக் கொண்டு நான் சுதந்திரமாகச் செயல்படுவேன்’ எனக் கொக்கரித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல் தில்லுமுல்லுகளை விக்கி லீக்ஸ் பக்கம் பக்கமாக வெளியிட்டது. தேர்தலின் துவக்க கட்டங்களில், பெர்னி சாண்டர்ஸைத் தோற்கடிக்க, கட்சியில் பலரிடம் பேரம் பேசியது,  பதவி ஆசை காட்டியது எனப் பல முறைகேடான நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அறிக்கைகள் வெளிவந்தன. அது மட்டுமின்றி அவர் வெளிநாட்டுச் செயலராக இருந்த சமயத்தில் பல நாட்டுப் பெரும்புள்ளிகளுக்கும், உலகத்   தலைவர்களுடன்  தொடர்பேற்படுத்திக் கொடுக்கத் தங்களது கிளிண்டன் ட்ரஸ்டுக்காக, அவர்  கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாகத் தகவல் கசிந்தது.

இப்படி இருவர் மீதும் அடுக்கடுக்கான புகார்களும், குறைகளும் இருக்க இரண்டில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் குழப்பமான பொறுப்பு, பொதுமக்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே சொல்லியிருந்தது போல இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவது நாட்டுக்கு நல்லது என்று தீர்மானிக்க வேண்டிய மக்கள், யார் வராமலிருந்தால் நாட்டுக்கு நல்லது என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்களுக்கும் குறைந்த கால அவகாசம் இருக்கும் இந்நிலையிலும் இரண்டு பெரும் வேட்பாளர்களும் மற்றவரைக் குறை சொல்லிக் காலம் கடத்துகிறார்களே தவிர, நாட்டு மக்கள் வாழ்க்கை மேம்பட என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

ஒருவகையில் இத்தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கப் போவது ஊடகங்களும், அவற்றைப் பின்னிருந்து இயக்குபவர்களும் தான் என்பது தெளிவாகிறது.  பல பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் ஏதோவொரு வேட்பாளரை ஆதரித்து, எதிராளியின் கடந்த கால ரகசியங்களையும், தவறுகளையும் வெளிக் கொணர்வதில்  போட்டி போட்டு ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வகையில் ட்ரம்பின் 2005ம் ஆண்டு காணொளியை வெளியிட்டது குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஒருவர் தான் என்ற தகவலையும் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களும், இணையதளங்களும்  ட்ரம்பின் ‘லாக்கர் ரூம் ‘ பேச்சுகளை, சொற்களில் ஆங்காங்கே நட்சத்திரங்களைச் சேர்ப்பதால் மறைத்துவிட்டதாக நினைத்துப் பரப்பி வருகின்றன. வருங்காலத் தலைமுறையினர் இதையெல்லாம் படித்தால் அரசியல் இவ்வளவு கீழ்தரமானதா  என்று நினைக்கக்கூடும். இரண்டாம் கட்ட விவாதம் துவங்க இருந்த போது, தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் ஒருவர் ‘உங்கள் வீட்டில் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தால்  அவர்களைப் படுக்க வைத்து விட்டு வந்து விடுங்கள் – இந்த விவாதத்தில் என்ன பேசுவார்கள் என்று தெரியாது’ என்று எச்சரித்தார்.

நமது வாசகர்  தெரிவித்திருந்ததைப் போல, ‘ட்ரம்ப் பதவிக்கு வந்தால் பலரும் தங்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவார்கள் ‘ போன்ற தகவல்கள் ஆரம்பப் பள்ளி (Primary School) வரை சென்றிருப்பது வருந்தத்தக்க  துரதிர்ஷ்டமே.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி உலக நாடுகளின் அதிபர் தேர்தல் வரை, எந்தத் தேர்தலிலும்,  எந்தவொரு வேட்பாளரின்  தேர்தல் வாக்குறுதியும், எந்தக் காலகட்டத்திலும் செயல்படுத்தப்படுவதில்லை  என்ற நிதர்சனம் அவர்களுக்குப் புரிய பல வருடங்களாகும்.

அமெரிக்கத் தேர்தல் பகுதி 10

– ரவிக்குமார்.

 

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad