கவித்துளிகள்
இயற்கையின் சாரல்
வறட்சியின் வெற்றி
மழைத்துளி மண்ணைத்
தொடும் வரை…
வந்தபின்
வறட்சியின் சுவடு
மறைந்தே போய்விடும்….
மண்ணின் வாசமும்
மழையின் சாரலும்
மகிழ்ச்சியில் மனம் இலேசாகி
நம் நாசித் துவாரங்களை
ஊடுருவும் ….!!
தளிர்கள் செழித்து செடியாகி
செடி நுனியில் வண்ணமிகு
மொட்டுக்கள் நாணி மலர்ந்து
தலை துவட்டும் …..!!
மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென
இலைகள் கேடயக் குடைகளாகும்
காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள்
மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும்
மழைத்துளிகளோடு…..!!
மனம் கமழ் பூமணங்கள்
காற்றில் கலந்து வந்து
குசலம் விசாரிக்க …
பசும்புல் பாய் விரிக்க
புல்லின் நுனியில் பனித் துளிகள்
பாந்தமாய் தவழ்ந்து விளையாட …
இதைக் கண்டு கோலமயிலாட
மனதினுள் தென்றல் வீச …
பலகுரலில் பறவைகள் பண்ணிசைக்க
நான்கு கால் பாய்ச்சலிலே முயல் துள்ளிஓட
இயற்கை அன்னையின்
அருட்கொடையை எண்ணி மிளிர்கிறேன் என்ன தவம் செய்தேனோ,
மானிடனாய்ப் பிறந்திட என்ன தவம் செய்தேனோ!
விதவை
தென்றல் தீண்டா கற்பூரபொம்மை
விரல் மீட்டா வீணை
வண்ணம் தொலைத்த வானவில்
தண்ணீரில் அழும் மீன்
சிப்பிக்குள் முடங்கிய வெள்ளம்
சிற்பியால் செதுக்க முடியாச் சிலை
பூஜையற்ற துளசி மாடம்
புன்னகை மறந்த தங்கப் பதுமை
சமுதாயத்தில் எத்தனையோ ஏற்றம்
இன்னும் உனக்கில்லை மாற்றம் ….
என் இருவிழிகளும் தடாகையாகின்றன
உந்தன் கோலத்தைக் கண்டு …!!
விடியலை நோக்கி அவளோடு நானும் …
விடை தருவார் யாரோ?
உமையாள்
Tags: nature, widow, இயற்கை, இயற்கைச் சாரல், கவிதை, கவித்துளிகள், விதவை