\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 10

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments

election2016_october30_2_620x469(பகுதி 9)

மாதக்கணக்கில் திரும்பிய பக்கமெலாம்  பரபரப்பான விவாதங்களும், சர்ச்சைகளும், அறிக்கைகளும், திருப்பங்களும்  கொண்டிருந்த அதிபர் தேர்தல் இன்னும் பத்து நாட்களுக்குள் நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதிகள் இருப்பதால் லட்சக்கணக்கானோர் ஏற்கனவே வாக்களித்து விட்டனர்.  (மினசோட்டா, மினியாபோலிஸ் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இவ்வசதியைப் பயன்படுத்த விரும்பினால், https://vote.minneapolismn.gov/www/groups/public/@clerk/documents/webcontent/wcmsp-185726.pdf என்ற சுட்டியில் விவரங்கள் அறியலாம்).

இருந்தாலும், கடந்த சில நாட்களில் நடைபெற்ற விஷயங்கள், நாம் சரியான முடிவைத் தான் எடுத்தோமா என்ற சந்தேகத்தை  இவ்வாக்களர்களுக்கு எழுப்பக் கூடும்.  இவர்களுக்கு மட்டும் அல்ல, நவம்பர் எட்டாம் தேதி வாக்களிக்க இருக்கும் பலருக்கும் எழும்.

அயோவா, பென்சில்வேனியா, வெர்ஜினியா, மிச்சிகன், கொலராடோ, நெவாடா, அரிசோனா, யூடா, ஜியார்ஜியா, ஓஹையோ, வட கரோலினா, டெக்சாஸ்   போன்ற பல மாநிலங்களில் ட்ரம்புக்கும், ஹிலரிக்கும் கடுமையான இழுபறி நிலவி வருகிறது. சென்ற வாரத் துவக்கத்தில் ஹிலரி இம்மாநிலங்களில் கணிசமான முன்னணி பெற்று மிகச் சாதகமான நிலையில் இருந்தார். அவரது அலுவலர்கள் ஹிலரியின் வெற்றி நிச்சயம் என்ற நினைப்பில், ஏற்கனவே ஒபாமாவிடமிருந்து அரசு மாற்றத்துக்கும், புதிய அரசில் இடம்பெறுவோரைத் தேர்ந்தெடுப்பதிலும் முனைப்புக் காட்ட துவங்கி விட்டிருந்தனர்.

குடியரசுக் கட்சியினரும் ஏறக்குறைய ஹிலரி வெற்றி பெற்று விடக் கூடும் என்றே எண்ணினர். மூன்றாவது விவாதத்தில் ட்ரம்ப் அமெரிக்கத் தேர்தல் முறையில் பல முறைகேடுகள் இருப்பதாய் மிகப் பலமான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஊடகங்கள் தமக்கு எதிராகச் செயல்படுவதாய்க் குறைபட்டார். இந்நிலையில் “தேர்தல் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேள்வி இருவர் முன்னும் வைக்கப்பட்டபோது, தடாலடியாக “பார்க்கலாம் .. அதை இப்போது என்னால் சொல்ல முடியாது.” என்று ட்ரம்ப் சொன்னது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஒற்றை வரி பதில், அமெரிக்க அரசியல் நோக்கர்களால் பெரிதாக ஆட்சேபிக்கப்பட்டது. ஜனநாயகத் தேர்தல் முறையில் மக்களுக்கிருக்கும்  நம்பிக்கையையே வீழ்த்திவிடும் அபாயமான வாக்கியமாக அது கருதப்பட்டது. இந்தக் காரணங்களால் குடியரசுக் கட்சியின் கோட்டைகள் என்று கருதப்பட்ட டெக்சாஸ், அரிசோனா போன்ற மாநிலங்கள் ஹிலரி பக்கம் சாயத் துவங்கிவிட்டிருந்தன. இதனால் ட்ரம்ப் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம் என்ற நிலை நீடித்தது. இவை எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை.

சில ஆண்டுகளுக்கு முன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் (Congressman) ஆண்டனி வீனர், முறைகேடான வகையில் பல இளம் பெண்களுடன் பாலினச் செய்திகளைப் பரிமாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அது தொடர்பான வழக்குகள் இன்னமும் நடந்து வரும் நிலையில் கடந்த மாதம் அவரது மடிக்கணினியைப் புலனாய்வுத் துறையினர் எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வில் வீனரின் மனைவி, ஹுமா அபைதீனும் அந்தக் கணினியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தனர். ஹுமா அபைதீன், ஹிலரி கிளிண்டனுக்கு நெருக்கமானவர். தற்போது ஹிலரியின் பிரச்சாரக் குழுவில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர். அதனால் அந்தக் கணினியில், ஹிலரிக்கும், ஹுமாவுக்கும் நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.  ஏற்கனவே  ஹிலரி மீது அரசு மின்னஞ்சல்களுக்காகத் தனது  தனிப்பட்ட கணினிச் சேவையகத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில் (அதனால் பல அரசு ரகசியங்கள் வெளியில் கசிந்திருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில்), இந்தக் கணினி பல புதிய தகவல்களை அளிக்கக்கூடும் என்று நினைத்த மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஜிம் கோமே, இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கலாம். வீனரின் கணினியில் ஹிலரியின் மின்னஞ்சல்கள் இருப்பதால், அதில் அரசு ரகசியங்கள் சிலவும் இருக்கக்கூடும்’ என்று அறிவித்திருந்தார்.

இச்செய்தி, சென்ற வாரம் வரை நிலவிய, மேலே கூறியிருந்த நிலையை முற்றிலும் திருப்பிப் போட்டது. ஹிலரிக்கு மிகவும் சாதகமாக இருந்த மாநிலங்கள் டானல்ட் பக்கம் சாயத் துவங்கி விட்டன. டானல்டின் ‘ஆக்செஸ் ஹாலிவுட்’ நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சுக்குப் பின்னர் என்ன ஆனாலும் சரி இனி டானல்டை ஆதரிக்க மாட்டேன் என்று கூறியவர்கள், லேசாகத் தடுமாறி, ‘நான் டானல்டை ஆதரிக்கவில்லை .. ஆனால் என் வோட்டு அவருக்குத்தான்’ என்று சொல்லத் தொடங்கி விட்டனர்.

தேர்தல் நடைபெறும் நேரங்களில், இது போன்று, வாக்காளர்களைக் குழப்பும், வேட்பாளர்களுக்குச் சாதக பாதகங்களை விளைவிக்கும் எந்தச் செய்தியையும் வெளியிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், கோமே இதை வெளியிட்டிருப்பது முறையற்ற செயலாகக் கருதப்படுகிறது. டானல்டின் தூண்டுதலால் இச்செயலை கோமே செய்துள்ளார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.இதற்கு முன்னர் ஹிலரியின் மின்னஞ்சல் ஊழல் குளறுபடிகளை ஆய்வு செய்து, அரசு ரகசியங்கள் எதுவும் அவரது கணினி வழியே கசியவில்லை என்று அறிவித்தவர் கோமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்புக்கு கோமேவைப் பாராட்டிய  ஹிலரி தரப்பினருக்கு, இப்போது கோமேவைப் பழித்து, குற்றஞ்சாட்டுவது இயலாது போய்விட்டது.

‘இந்தத் தேர்தலில் சூழ்ச்சிகள் நிறைய உள்ளன .. எனக்கு இந்தத் தேர்தலில் நம்பிக்கையில்லை’ என்று சொல்லி வந்த டானல்ட், மெல்ல, ‘நான் நினைத்த அளவுக்கு இந்தத் தேர்தல் மோசமடையவில்லை. கோமே போன்றவர்கள் அதை நிருபித்துள்ளார்கள்’ என்று புதிய உற்சாகத்துடன் சொல்லி வருகிறார்.

இதனால் இருவரில் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி மீண்டும் மக்களிடம் தோன்றியுள்ளது. இரண்டு வேட்பாளர்களுக்கும் மிக மிகக் கடுமையான போட்டி நிலவி வருவதால், முடிவு என்னவாக இருக்கும் என்று ஒருவராலும் கணிக்க முடியவில்லை. ஹிலரி தான் வெற்றி பெறுவார் என்று அறிவித்து வந்த ஊடகங்கள் அவரது சமீபத்திய வாக்குச் சரிவுகளுக்குப் பின்னர் குழம்பிப் போயுள்ளன. 2000ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் மற்றும் அல் கோர் இடையே இது போன்றதொரு கடுமையான போட்டி நிலவி, ஃபிளாரிடா மாநில ஓட்டுகளில் குழப்பம் வந்து கடைசியில் ஐநூறு வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே  புஷ் வெற்றி பெற்றது நினைவிருக்கும்.  அது போன்றதொரு இழுபறி நிலை இத்தேர்தலில் வரக்கூடும். எப்படி இருந்தாலும் வெற்றிக்குத் தேவையான 270 எலக்டோரல் வாக்குகளை டானல்ட் ட்ரம்ப் பெறுவது மிகக் கடினம் என்றே பலரும் சொல்லி வருகின்றனர்.

பாப்புலர் வோட் எனப்படும் மக்கள் வாக்குகளில் டானல்ட் முன்னிலை பெறக்கூடும் என்றும் எலக்டோரல் வாக்குகளில் ஹிலரி முன்னிலை பெறுவார் என்றும் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வாக்களிக்க இன்னும் பத்து நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் மேலும் பல புதிய திருப்பங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

அதிபருக்காக வாக்களிப்பதோடு, சில மாநிலங்களில் காங்கிரஸ் பிரதிநிதிகள், செனட்டர்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. மினசோட்டாவைப் பொறுத்தவரை  செனட்டர்களுக்கான தேர்தல் இப்போது கிடையாது.

காங்கிரஸ் பிரதிநிதிகளுக்காக, குடியரசுக் கட்சி சார்பில் ஜேசன் லூயிசும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஏஞ்சி க்ரேய்க்கும் போட்டியிடுகின்றனர்.  இது தவிர மாநில நீதிபதிகள்,  மாநில செனட்டர்கள், நகராட்சித் தலைவர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான அனைத்து வேட்பாளர்கள் பெயரும் வாக்குச் சீட்டில் இடம்பெற்றிருக்கும். இதன் விவரங்களை இணையத்தில் காணலாம்.

குடியுரிமை பெற்றிருந்து நீங்கள் இதுவரை வாக்காளாராகப் பதியவில்லை என்றால் தேர்தல் நாளன்று கூடப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய ஏதாவதொரு ஃபோட்டோ ஐடெண்டிபிகேஷன் அவசியம். (வாக்களிக்க ஃபோட்டோ ஐடி தேவையில்லை).

முடிவு எப்படியிருப்பினும், அமெரிக்கக் குடியுரிமையுள்ள நம் ஒவ்வொருவர் வாக்குகளும் மிகச் சக்தி வாய்ந்தவை. அதைப் பயன்படுத்துவது நமது தார்மீகக் கடமை. எனவே தவறாமல் வாக்களிப்போம்.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad