\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பேராசை கொண்ட போக்கிரி ரக்கூன்

raccoon_story_headshot_620x620சூப்பீரியர் காட்டில் ஒரு போக்கிரி ரக்கூனிற்கு நீண்ட நாட்களாக ஒரு பேராசையிருந்து. அது தான் எப்படியாவது ஒரு நாள் காட்டிற்கு தலைவனாக வேண்டும் என்று ஆசைப்பட்டது.

இதற்காக எத்தனையோ திட்டங்களையெல்லாம் தீட்டியது. தனது போக்கிரித்தனத்தினால் பல குறுக்கு வழித்ததந்திரங்கள் எல்லாம் செய்தது. ஆனால் அவையொன்றுமே பயனளிக்கவில்லை. காரணம் காட்டின் சமூகத்தின் நலன்கருதி வாழும் ஓநாய் மூதாட்டியையே வனவிலங்குகள் தலைவியாகக் கருதின. எனவே காட்டு ஓநாய் மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை தனக்கு வழியேயில்லை என்று புரிந்து கொண்டது.

எனவே ஒருவருமே தன்னை மதிக்கவில்லையே எனக் கவலைப்பட்டது. இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு சுப்பீரியர் ஏரிக்கரை முழுதும் மேலும் கீழுமாக நடந்து திரிந்தது.

“என்றாவது ஒரு நாள் நான் சுப்பீரியர் காட்டிற்குத் தலைவனாக வேண்டும்” என்ற நப்பாசையில் நடந்து திரிந்தது.

நடந்து வருகையில் ‘கிச்சிகூமி’ என்னும் இடத்தில் சில உல்லாச வாசிகள் மர நிழலில் அமர்ந்திருப்பதை போக்கிரி ரக்கூன் கண்டது. அந்த மனிதர்கள் தாம் கொண்டு வந்த சிற்றுண்டிப் பொட்டலங்களை, மற்றும் தம் குடிபானப் போத்தல்களை விட்டு சுப்பீரியர் ஏரிக்கரை நோக்கிக் சென்றனர்.

போக்கிரி ரங்கூன் சமயம் பார்த்து பதுங்கிப் பதுங்கி சிற்றுண்டிப் பாத்திரங்களை எட்டிப் பார்த்தது. எஞ்சியிருந்தவற்றை சுவைத்துக் குடித்தது. ரங்கூன் தெரியாமல் உல்லாச வாசிகள் விட்டுச் சென்ற மதுபானத்தையும் குடித்து விட்டது. சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏற, ரக்கூன் தடுமாறி தனது சுய நிலையை மறந்தது. மனதிலோ காட்டுக்குத் தலைவன் ஆகும் எண்ணம் வரத்தொடங்கியது.

தனக்கு முன்னால் வந்த விலங்குகள், பறவைகள் எல்லாவற்றையும் பார்த்து “சுப்பீரியர் காட்டுக்குத் தலைவன் யாரடா? யாரடி?” என்று கேட்க ஆரம்பித்தது. போக்கிரி ரக்கூன் போதையேறி உளறுவதைப் பார்த்து மற்றய விலங்குகள் விலகிச் சென்றன.

அப்போது மூதாட்டி ஓநாய் அவ்விடம் வருவதை போக்கிரி ரக்கூன் கண்டது. அதைக் கண்ட ரக்கூன் “யாரடி காட்டுக்குத் தலைவன் நீ சொல்லடி கிழவி “ என்று சத்தமிட்டுக் கேட்டது. நிலை தளம்பிய ரக்கூனுடன் உரையாட விரும்பாத மூதாட்டி ஒநாயும் விலகிச் சென்றது. இதனால் ஓநாய் தன்னைப் பார்த்துப் பயந்து விட்டதாக வீறாப்புடன் மூதாட்டி ஒநாயை “யார் தலைவன் என்று சொல்லுடி “ என்று அதட்டியது.

போக்கிரி ரங்கூனின் பொறுப்பற்ற பேராசையைப் புரிந்து கொண்ட முதிய ஒநாய் “சரி நீதான் தலைவன்” என்றது. அதைக் கேட்ட மது போதையுள்ள ரகூனின் ஆணவம் அதிகரித்து விட்டது. அது மேலும் தலைக்கனம் கொண்டு வீறாப் பாகக் கத்திய படி சுப்பிரியர் காட்டைச் சுற்றி வந்தது.

இடையில் வந்த சுண்டெலிகள், சிறு குருவிகளை அவற்றின் காலிலும், வாலிலும் பிடித்து “காட்டுக்கு தலைவன் யார் “ என்று மிரட்டிக் கேட்டது.

raccoon_story_620x400பாவம் சுண்டெலிகளும், சிறு பறவைகளும் “நீங்கள் தான் தலைவர் ரக்கூன் அவர்களே” என்று பயந்து கூறித் தப்பின.

மேலும் ஆணவமும் போதையும் ஏறிய ரக்கூன் “யாரடா…, யாரடி காட்டுக்குத் தலைவன்” என்று வந்த, போன மான்கள், மரைகள் யாவற்றையும் அதட்டிக் கேட்டது. ரக்கூன் நிலைவரம் புரிந்த அவையும் “நீ தான் தலைவன்” என்று கூறின.

அப்பொழுது, “கூஸ்பெரி” மேல் நீர்வீழ்ச்சியில் மீன் பிடித்துத் கொண்டிருந்த பெரும் மண்ணிறக் கரடி உணவுண்டு நீராடி வெளியே வந்து கொண்டிருந்தது.

போதை ஏறிய போக்கிரி ரக்கூனும், கரடியும் நேருக்கு நேர் எதிர்கொண்டன. சாப்பிட்டுச் சந்தோசமாக வந்து கொண்டிருந்த கரடி எதுவித சச்சரவும் இல்லாமல் தன் பாட்டில் போக முனைந்தது.

ஆயினும் ரக்கூனின் அகங்காரம் விட்டு வைத்ததா?… இல்லவே இல்லை. பெரும் மண்ணிறக் கரடிக்கு முன்னால் சென்று குதித்து “சுப்பிரியர் காட்டுக்குத் தலைவன் யாரடா” என்று கேட்டது.

மண்ணிறக் கரடியும் நிலவரத்தைச் சுதாகரித்துக் கொண்டு ஓரமாக விலகிச் சென்றது. போக்கிரி ரக்கூன் மீண்டும் பெருங் கரடிக்கு முன்னால் போய் “தலைவன் யார் என்று சொல்லாவிட்டால் உன்னைப் போக அனுமதிக்க மாட்டேன்” என்றது.

raccoon_story_3_620x620மறுகணம் கரடி அயலில் உள்ள பேர்ச் மரக்கிளையை முறித்து ரங்கூனை நையப் புடைத்தது. அடிபட்டுக் கீழே கிடந்த ரக்கூனைத் தனது கூரிய நகங்களால் பதம் பார்க்கக் கையோங்கியது.

அதைப் பார்த்துப் பயந்து போன போக்கிரி ரக்கூன் “ஐயா கரடி அவர்களே, சின்னவனாகிய நான் தெரியாமல் கேட்டு விட்டேன், எனது பிழையை உணருகிறேன், மேலும் அடிக்காதீர்கள்” என்று கெஞ்சிக் கேட்டது.

போக்கிரி ரக்கூன் கெஞ்சலைக் கேட்ட பெருங் கரடி ரங்கூனுக்கு “உனது தகுதிக்கு மேல் ஆசைப்படாதே“ என்று அறிவுரை கூறியது.

தனது உயிர் தப்பியதே பெரிய விடயம் என அறிந்த போக்கிரி ரக்கூன் மண்ணிறக் கரடிக்குக் கும்பிடு போட்டு விட்டுக் காட்டிற்குள் ஓடியது.

– யோகி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad