\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சிம்சோனின் வலிமை எங்கே … ? பைபிள் கதைகள்

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on October 31, 2016 0 Comments

biblestory_samson_620x620திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்போம்.

அந்தக் காலத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாக் கொடைகளையும் கொடுத்திருந்தார்.  

வசதி வந்தால் வழிமாறும் மனிதர்கள் போல  இஸ்ரயேல் மக்களும் கடவுளை மறந்து தீய வழிகளை நாடிச் சென்றனர். அதன் பலனாகத்  தங்களுடைய உரிமைகள் இழந்து   பெலிஸ்தியர்களுக்கு அடிமையானார்கள்.

அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்ற கடவுள் சிம்சோன் என்பவரைப் படைத்தார்.  

சிம்சோன் வளர்ந்து அழகான, வலிமையான வாலிபனாக உருவெடுத்தார். சாதாரண வலிமையல்ல, ஒருநாள் அவரை நோக்கிப் பாய்ந்து வந்த ஒரு சிங்கக்குட்டியை வெறுங்கையால் எதிர்கொண்டு  ஒரு ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் அந்தச் சிங்கக் குட்டியை இரண்டாகக் கிழித்தார் என்றால் நினைத்துப் பாருங்கள்….காரணம் ஆண்டவருடைய ஆற்றல் சிம்சோன் மீது இருந்தது.

வாலிபத்தில் வரும் காதல் இயல்பே.  அந்த வாலிபக்காதல் சிம்சோனையும் தொட்டது.

சிம்சோன் ஒருநாள்  திமினா என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பெலிஸ்தியர் பெண்ணை கண்டார்,  கண்டதும் காதலாக அந்தப் பெண்ணின் மீது வயப்பட்டார்.

திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், “நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய பெண், இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார்.

அவர் தந்தையும் தாயும் அவரிடம், “உன் உறவுப் பெண்கள்  யாரும் இல்லையா?  நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்?” என்று கேட்டனர்.

ஆனால் சிம்சோன் அந்தப் பெண்ணை மணம் முடிப்பதில் உறுதியாக இருந்தார்.

அவர் தந்தைக்கும் தாய்க்கும் இது எல்லாமே கடவுளுடைய செயல் என்று தெரியவில்லை.

சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர்கள் மீது பாய்ந்தது.

ஆண்டவருடைய ஆற்றல் சிம்சோன் மீது இருந்ததால் அவர் ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை வெறுங்கையால் கிழித்தார்.

சிம்சோன் பெற்றோடு  பெண்வீட்டுக்குச் சென்றார்.  பெண்வீட்டார் இவர்களுக்கு விருந்தளித்தது மட்டுமில்லாது, சிம்சோனுக்குத் தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர். நம் ஊரில் மாப்பிள்ளை தோழன் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதேதான். திருமணமும் நடந்தது.

மாப்பிள்ளை சிம்சோன் சும்மா இருப்பாரா,  முப்பது தோழர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். ஏழு நாட்களுக்குள் அதற்கு விடை கண்டுபிடித்து எனக்குக் கூறினால், நான் உங்களுக்கு முப்பது பட்டாடைகளை அளிப்பேன்.

நீங்கள் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது பட்டாடைகளைக் கொடுக்க வேண்டும்” என்று சொல்லி விடுகதையையும் சொன்னார்.

மூன்று நாளாகியும் அவர்களால் விடு கதைக்கு விடை காணமுடியவில்லை.

நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “உன் கணவனை மயக்கி, விடுகதையின் விடையை எங்களுக்குக் கூறச் சொல்.” என்றனர்.

சிம்சோனின் மனைவி எப்படியோ தனக்கு மட்டும் விடையைச் சொல்லுமாறு நிர்ப்பந்தித்து அந்த விடையைத் தோழர்களிடம் சொல்லிவிட்டார்.

இது தெரியாத சிம்சோனிடம் தோழர்கள் விடையைச் சொல்லிப் பட்டாடைகளைப் பெற்றனர்.  சிம்சோன் வெறுத்துப் போய் தன் ஊருக்கே போய்விட்டார்.

சில நாள்களுக்குப் பிறகு, சிம்சோன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார்.  ஆனால், அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

வெகுண்ட சிம்சோன் பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியர்களின் பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரியூட்டச் செய்தார்.

பெலிஸ்தியர் “இதைச் செய்தது யார்?” என்றனர். “இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன்.” என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று சிம்சோனின் மனைவியையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.

இதை அறிந்த சிம்சோன் பெலிஸ்தியர் பலரை வெட்டி வீழ்த்தினார்.

நாட்கள் நகர்ந்தன…. சிம்சோன் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார்.

அவள் பெயர் தெலீலா.

பெண்ணாலே  சிம்சோன் பலகீனமானார்.  பெலிஸ்தியச் சிற்றரசர் தெலீலா, சென்று, “நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது; எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம்” என்றனர்.

காசுக்கு ஆசைப்பட்ட தெலீலா சிம்சோனிடம், “எதில் உமது பெரும் வலிமை உள்ளது, என்னிடம் சொல்லும்” என்றாள்.

சிம்சோன் அவளிடம், “ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதர்களைப் போல் ஆகிவிடுவேன்” என்றார்.

பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர். அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள்.

ஆட்கள் அறையில் ஒளிந்து கொண்டிருக்க, அவள் அவரிடம், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். நெருப்புப்பட்டதும் சணல் கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார். அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை.

தெலீலா சிம்சோனிடம், “இதோ! நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும்” என்றாள்.

அவர் அவர்களிடம்;, “இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதர்களைப் போல் ஆகிவிடுவேன்” என்றார்.

தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்டிய பின்,  “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். நூல்கயிற்றைப்போல் சிம்சோன் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.

தெலீலா சிம்சோனிடம், “இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து , என்னிடம் பொய்கள் சொல்லிவிட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச் சொல்லும்” என்றாள். அவர், “என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவு நூலால் பின்னினால் போதும்” என்றார்.

ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார்.

அவள் அவரிடம், “மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை” என்றாள்.

அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.

எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம், “சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் பிள்ளையாக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்” என்றார்.

அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, “உடனே வாருங்கள்; அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார் “ என்று ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர்.

அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்.

அவள், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!” என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து “முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்” என்று சொன்னார். ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை.

பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்தினர்.

மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது.

முடி வளர வளர சிம்சோனின் வலிமையையும் கூடியது.சிம்சோன் தன முடியை நன்றாகச் சுருட்டி மறைத்து வளர்த்ததால் யாரும் அதைப் பெரிதாதக் கருதவில்லை.  

பெலிஸ்தியச் சிற்றரசர், “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்” என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூட்டினார்.

மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார். அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்; நம்மில் பலரைக் கொன்றவன்; என்றனர்.

அவர்கள் அகமகிழ்ந்திருக்க, “சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்” என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படிச் செய்தனர்.

சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் “இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்; நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன்” என்றார்.

ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிம்சோன் ஆண்டவரை நோக்கி, “என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே! என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும்” என்று மன்றாடினார்.

சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார்.

சிம்சோன், “என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்” என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார்.

அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர்.

-ம.பெஞ்சமின் ஹனிபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad