வாசகர்களுக்கு வணக்கம் !
இந்த இதழ் வெளிவரும் நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரங்களில், உலக ஜனநாயகத்தில் மிகப்பெரிய ஒன்றான அமெரிக்க நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும். பண்டைய காலத்து குடவோலை முறை தொடங்கி இன்றைய காலத்து நவீன இயந்திரங்களின் உதவியுடன் நடத்தப்படும் தேர்தல்கள் வரை, இவை அனைத்தின் எதிர்பார்ப்புகளும் சாதாரண மனிதர்கள் தங்களுக்குத் தேவையான தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதுதான். நாட்டின் பல துறைகளும் நாணயம் குறைந்து விட்டது என்பது உண்மைதான் என்றாலும், இன்றும் சாதாரணக் குடிமக்கள் வாக்களித்து மட்டுமே ஒருவர் பதவிக்கு வர இயலுமென்ற நிலை உலகின் பெரும்பான்மையான நாடுகளில் தொடர்ந்து வருகிறது.
அது சரி, ஆனால் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக அவர்களின் முன்னால் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் தரங்களைப் பார்த்தால், எவரைத் தேர்ந்தெடுத்தாலும் சரியாக இருக்காது என்பதே இன்றைய நிதர்சனம். ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவராக இருப்பவர்களுக்குப் பெரிய அளவில் குழப்பமில்லை. அவர்கள் பொதுவாக வேறெந்தத் தகுதிகளையும் எதிர்பார்ப்பதில்லை. தங்களின் கட்சியைச் சார்ந்தவர்கள் எனில் கண்களை மூடிக்கொண்டு வாக்களித்து விடுவர். அல்லது தங்களுக்காக ஒரு குறிப்பிட்ட சாதகங்களை எதிர்பார்ப்பவர்கள் அவை கிடைக்கும் எனத் தாங்கள் மனப்பூர்வமாக நம்புபவர்களைத் தேர்ந்தெடுப்பர்.
இதுபோன்ற இரண்டு நிலையிலும் இல்லாத நம் போன்ற சாதாரணமானவர்களுத்தான் மிகப் பெரிய குழப்பம். எந்த அரசியல்வாதி பதவிக்கு வந்தாலும், நமக்காக எதையும் பெரிதாகச் செய்துவிட மாட்டார்கள் என்று தீர்க்கமாக நம்பும் நம் போன்றவர்கள் முழுவதுமாக எதிர்பார்ப்பது பொதுவாழ்வில் ஓரளவுக்காவது மதிக்கத் தகுந்த பண்புகளைக் கொண்டவர்களை மட்டுமே. பொதுவாக அரசியல்வாதி என்றால் நேர்மையற்றவர்களே என்ற முடிவுக்கே வந்துவிட்ட நாம், சாதாரணமான மனிதர்களாகவாவது இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட அதற்குப் பல மடங்கு தரம் தாழ்ந்தவர்கள் மட்டுமே தெரிவுகளாக அமைகின்றனர் என்று நினைக்கையில் என்னதான் செய்வது?
அமெரிக்கத் தேர்தல் முறையில், ஒரே ஒரு வழி இருக்கிறது. இருக்கும் அதிபர் வேட்பாளர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கையில்லையெனும் பட்சத்தில், நமக்குப் பிடித்த ஒருவரின் பெயரை எழுதலாம். இதுவரை, இது போல எழுதப்பட்ட எவரும் வெற்றி பெற்றதில்லை இனிமேலும் வெற்றி பெறப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்திருந்தாலும், நம் மனதிற்கு ஒரு விதமான அற்ப சந்தோஷமாவது மிஞ்சும் என்ற காரணத்தால் இந்த வழிமுறையைக் கடை பிடிக்கலாம்.
இல்லையெனில் இன்னொரு வழி இருக்கிறது. நமக்கு மேல் இருக்கும் கடவுள் என்றொருவன் என்றோ ஒரு நாள் கண் திறந்து இந்த நிலையை மாற்றுவான் என்று நம்பி நம் வாழ்வைத் தொடரலாம்.
ஆசிரியர் குழு.