காதல் பிசாசே ..
ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு பறந்தது. சுவர்களில் என்னென்னவோ விளம்பரங்கள் .. எழுத்துக் கூட்டி ஒவ்வொன்றாய்ப் படித்துக் கொண்டிருந்தான் தினேஷ். ‘அக்டோபர் 26ல் DREU மாபெரும் ஊர்வலம்’, ‘சென்னை சில்க்ஸ் தீபாவளித் தள்ளுபடி’ , ‘மாஸ் டெய்லரிங் பள்ளி’, ‘அஞ்சால் அலுப்பு மருந்து’ .. ‘CMS கம்யூட்டர்ஸ், asp.net, Visual Studio’ என்ற எழுத்துக்களில் ஒரு சிறுவன் வளைத்து வளைத்து ஒண்ணுக்கடித்துக் கொண்டிருந்தான். ச்சே .. இன்னும் வண்டி வரலயே.. ஒருவேளை போய் விட்டதோ?
‘கோயம்பேடு தொடர்வண்டி வந்துட்டு போயிடுச்சிங்களா?’ பக்கத்திலிருந்தவரிடம் கேட்டான்.
அமெரிக்கால தமிழ் படிச்சுட்டு வந்தியா என்ற தொனியில் பார்த்தவர் ‘ஏம்பா ..மெட்ரோ ரிடர்ன் போயிட்ச்சா’ என்றார் பக்கத்திலிருந்தவரிடம்.
‘இல்ல இல்ல..’, ‘வர்ற நேரந்தான் ..’, ‘அது என்னிக்கு டைமுக்கு வந்திருக்கு..’ பலர் பதில் சொன்னார்கள்.
சில நிமிடங்களில் வண்டி மெதுவே நிலையத்துக்குள் நுழைந்தது ..
‘யாத்ரியோ கிருப்யா தான்தி .. மெட்ரோ காடி நம்பர் ..’ என்று அலறியது ஒலிப்பெருக்கி.
வண்டி நின்றதும் கொத்துக் கொத்தாக ஜனங்கள் வெளியேறினர். வெள்ளைச் சுடிதார், கிளிப்பச்சை டாப்ஸ், மெஜந்தா குர்தி, கருப்பு டெனிம் எனப் பல பெண்கள்… வைஷுவை மட்டும் காணவில்லை. இன்றும் வரவில்லையா? கோபமாக வந்தது தினேஷுக்கு … இந்தியர்களுக்கு நேரமும் காலமும் பொருட்டில்லை என்று தெரியும்.. இருந்தாலும் நாலு நாளாக .. நேரிலும் வரவில்லை .. ஃபோனும் பண்ணவில்லை .. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்? ஃபோனில் கூப்பிட்டான்.. வழக்கம் போல ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
‘ன்னா பாஸ் .. உங்காளு இன்னிக்கும் வர்லையா?’ சடாரென முகத்துக்கு எதிரே வந்து நின்றான் அவன்.
‘ஹே… யாரு நீ?’
‘கூல் பாஸ்.. எதுக்கு டென்ஷனாவுறீங்க? வரல தானே? வர மாட்டாங்க.’ சொல்லிக் கொண்டே நடந்தான் .
‘நில்லுங்க .. யாரைப் பத்தி சொல்றீங்க? உங்களுக்கு என்னைத் தெரியுமா?’ வேக வேகமாகப் பின்னால் நடந்தான்.
“கொஞ்சம் .. இப்பத்தான் ஒரு மாசமா தெரியும் .. நீங்க வைஷுவை பிக்கப் பண்ண வர்றப்ப பாத்திருக்கேன் .. உங்க பேரு தினேஷ்.. அமெரிக்காலருந்து வந்திருக்கீங்க…. ரொம்ப சீரியஸா அவங்கள லவ் பண்றீங்க.”
“நீங்க வைஷுவுக்குச் சொந்தமா .. அண்ணா, தம்பி அந்த மாதிரி..”
“இவ்ளோ டீப்பா லவ் பண்றேன்னு சொல்றீங்க .. அவங்க ஒரே பொண்ணுன்னு தெரியாதா?”
“இல்ல.. கஸின் மாதிரியா?”
நின்றான்.. “அதெல்லாம் ஒண்ணுமில்ல பாஸ் .. உங்க வெல் விஷர்னு வச்சுக்குங்களேன். அதான் சொல்றேன் .. இனிமே அவங்க வரமாட்டாங்க .. விட்ருங்க .. விட்டுட்டு ஒழுங்கா ஊருக்கு கிளம்பற வழியப் பாருங்க ..”
“ப்ளீஸ்.. நீங்க யாரு சொல்லுங்க .. வைஷு ஏன் வர மாட்டாங்க?”
“இப்போ நேரமில்ல ..வண்டியைப் பிடிக்கணும் .. என் நம்பர் தரேன் .. ” பர்சிலிருந்து ஒரு கார்டை நீட்டி விட்டு ஓடினான்.
“கூப்பிடறேன் .. கண்டிப்பா கூப்பிடறேன்.. பட் பீளீஸ் .. வைஷு எங்க போயிருக்காங்க .. சொல்லுங்க .. எப்ப வருவாங்க …” பின்னால் ஓடினான்
“வரமாட்டாங்க ..வரமாட்டாங்கன்னா வர மாட்டாங்க .. “
“ஏன்?”
வண்டியில் தொத்திக் கொண்டு திரும்பிப் பார்த்துக் கத்தினான் ..”செத்துட்டா ..செத்துப் போயிட்டா ” .. வண்டி வேகம் பிடித்துப் புள்ளியாய் மறைந்தது.
—000—
தினேஷுக்கு வைஷாலி அறிமுகமானது மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவன் பர்டியு யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருந்தபோது. நெஃப்ராலாஜி படிப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்திருந்தாள் வைஷு. ஹை ஸ்கூலில், சிண்டியுடன் ப்ரேக் அப் ஆனதிலிருந்து பெண்கள் மீது அவ்வளவாக நாட்டமில்லாது இருந்த தினேஷுக்கு, முதல் முதலாய் வைஷுவை நூலகத்தில் சந்தித்தபோது சின்னதாய் ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் உணவகம், மெய்ன் லாபி போன்ற இடங்களில் பார்த்த போது லேசாகப் புன்முறுவலித்தாள். நான்கைந்து சந்திப்புகளுக்குப் பின்னர் பாஸ்கெட்பால் ஸ்டேடியத்தில் பேச முடிந்தது. ஜூடி தான் அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். அந்த முதல் சந்திப்பு மிக மேலோட்டமாகத்தான் இருந்தது. பின்னர் இரண்டாண்டுகளில் பல சந்திப்புகள், உரையாடல்கள், தனிமையான தருணங்கள், நெடிய கார் பயணங்கள், சிற்சில கருத்துப் பேதங்கள் என நெருக்கம் வளர்ந்தது. ஆனால் இந்த உறவை, உறவின் அர்த்தத்தை இருவரும் புரிந்துகொள்ள முனையவில்லை. படிப்பு முடிந்து வைஷு இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய தருவாயில் தான் இருவரும் அதைப் பற்றி யோசிக்கத் துவங்கினர். இருவருக்குமிடையே தோன்றிய இந்த உறவு சில ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவு காரணமாக உடையாது இருந்தால், அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிப்போம் என்று முதலில் சொல்லியது வைஷு தான். பள்ளி காலச் சிறுபிள்ளைத்தனமான உறவில் கற்ற பாடத்தால் தினேஷும் அதற்குச் சம்மதித்தான்.
மூளையளவில் பலதையும் சிந்தித்து இருவரும் எடுத்த முடிவு, மனதளவில் தோற்றுப்போனது . முதல் வாரப் பிரிவில் சின்ன சின்னதாய் எட்டிப்பார்த்த ஏக்கங்கள், சில மாதங்களில் பூதாகாரமாய் வளர்ந்து இருவரையும் அலைக்கழிக்கத் துவங்கின. ஸ்கைப், தொலைபேசி உரையாடல்கள் இந்த உறவுத்தீயை அணைக்கப் போதுமானதாகயில்லை. சென்னைக்கு அருகிலுள்ள அட்டாமிக் ரிசர்ச் மையத்தில் ஒன்பது மாதப் பயிற்சி வாய்ப்புக் கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்டான் தினேஷ். மடிப்பாக்கத்தில், பாட்டி வீட்டில் தங்கிக் கொண்டு, கல்பாக்கம் போய் வரத்துவங்கினான். வைஷு க்ளோபல் வில்லேஜ்,சோழிங்க நல்லூரில் ஜூனியர் நெஃப்ராலஜிஸ்ட். அசோக் பில்லர் அருகே வீடு. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வண்டி மாறி, தாம்பரம் வரையில் தினேஷுடன் பயணிப்பாள்.
தினேஷுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போனது. இருபத்து நாலு ஆண்டு அமெரிக்க வாழ்க்கையின் வெறுமையை மறக்கடித்தது இந்த வாழ்க்கை. தினமும் காலையில், வைஷுவின் பக்கத்தில் நிற்கும் தருணங்களில், அவள் மீதிருந்து தவழும் சன்னமான மல்லிகை வாசத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. அந்த இருபத்தியைந்து நிமிட ரயில் பிரயாணத்தில் தான் எத்தனை சுகம். சில சனிக்கிழமைகளில் பெசன்ட்நகர் பீச்சில் நடக்கையில் காற்றில் அலைபாயும் தலைமுடியைக் கோதிக்கொண்டே பேசும் அவளைப் பார்ப்பது ஜென்ம சாபல்யம். இண்டியானாவில், பதினாறு மணி நேரம், கல்லூரி, படிப்பு என்று ஓடிக் கொண்டிருந்த அவள் முகத்தில் கண்டிராத தேஜஸும், பளபளப்பும் சென்னையில் பொங்கி வழிவதாகத் தோன்றியது. மருத்துவம் படித்திருந்தாலும், அவளிடம் தொற்றிக் கொண்டிருந்த வெகுளித்தனமும், மற்றவர்கள் பார்த்துவிடப் போகிறார்களோ என்று அவ்வப்போது அவள் கண்களில் எட்டிப்பார்க்கும் பயமும் அவனுக்குப் பிடிக்கும்.
தாம்பரத்திலிருந்து, ஆபிஸ் வேனில் போகும் பொழுது கேட்கும் ‘அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்’ என்ற பாடல் ஞாபகம் வரும். யார் பாடல் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. உடைந்த தமிழில் அவன் பாடியதைக் கேட்டு அவள் சிரித்து விட்டு, ‘நீ பாடறதைக் கேக்க கூடாதுன்னு தான் அவர் போய் சேந்துட்டார்’என்று முத்துக்குமாரைக் குறிப்பிட்ட போது, வருத்தப்பட்டான். ‘நீ கட்டளைகள் விதிக்க, நான் கட்டுப்பட்டு நடக்க, இந்த உலகத்தை ஜெயித்திடுவேன், அன்பு தேவதைக்குப் பரிசளிப்பேன்’ என்ற வரிகளை அவளைப் பார்த்து பாடினால் கைகளைப் பிடித்து நெஞ்சோடு சேர்த்துக் கொள்வாள்.
இனி இவள் இல்லாது வாழ்க்கையில்லை என்ற நிலைக்கு வந்திருந்தபொழுது, யாரோ ஒருவன் வந்து அவள் இறந்து விட்டாள் என்று சொல்கிறான். ஓரிரு நிமிடங்கள் உடலிலிருந்த அத்தனை ரத்தமும் மண்டைக்குப் பாய்வது போலிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. யாரிவன்? என்ன சொல்கிறான்? ஃபோனை எடுத்து அவன் கொடுத்த நம்பரை அழைத்தான். ‘பாஸ் .. ஃபுட்போர்ட்ல இருக்கேன் .. நானே அப்புறம் பேசறேன் ..’ வைத்து விட்டான். இரண்டு நாள் அலைக்கழித்து விட்டு, ஒரு நாள் மாலை ‘ஃப்ளுயிட்ஸ்’ பாருக்கு வரச் சொன்னான்.
‘சாப்பிடுங்க பாஸ் … உங்களுக்கு தான் இது தேவை ..’
‘இங்கப் பாருங்க.. உங்களுக்கு நான் எத்தன வேணாலும் வாங்கித் தரேன் .. வைஷுக்கு என்ன ஆச்சு .. நீங்க சொன்னது பொய்தானே?’
‘கூல் டவுன் பாஸ் .. நான் சொன்னது பொய்யா இருக்க கூடாதான்னு எனக்கே தோணுது .. பாவம் பாஸ் நீங்க.. ‘
‘அய்யோ…என்னன்னு சொல்லுங்க .. பிளீஸ்’
‘புரியுது ப்ரதர் … சாரி .. சடனா பிரதர்னு சொல்ட்டேன்.. சாரி பாஸ்’
‘நீ என்ன வேணா சொல்லிக்கோ. வைஷுவுக்கு என்ன ஆச்சு?’
‘கேட்டா நீங்க தாங்க மாட்டீங்க பாஸ்.. விட்ருங்க … அடுத்த ஜென்மத்தில பாத்துக்குங்க … ஃப்யூர் லவ் பாஸ் உங்கள்து.. கண்டிப்பா நெக்ஸ்ட் பர்த்ல மீட் பண்ணுவீங்க…. ஹலோ ரெண்டு பீநட் சாலட் கொண்டாங்க.’
‘வாட் த … சாரி .. சேது தானே பேரு ..’ பாக்கெட்டிலிருந்த அட்டையை எடுத்துப் பார்த்துக் கொண்டான்.. ‘என்னைக் கோபப்படுத்தாதிங்க .. இது விளையாட்டு இல்லை .. சொல்லுங்க வைஷு இருக்காங்க தானே .. உயிரோட இருக்கா தானே ..’
கிளாசை காலி செய்து நங்கென்று வைத்துவிட்டு இடக்கையால் வாயைத் துடைத்துக் கொண்டான்.
‘சூசைட் .. சூசைட் பண்ட்டாங்க பாஸ் ..’
‘சூசைடா?’
‘ஆமா பாஸ் .. எல்லாம் இந்த லவ்வால தான் .. உங்க விஷயத்த எவனோ அவங்கப்பன் கிட்ட பத்த வெச்சிட்டான் .. மொத நாள் ராத்திரி ஒரே சண்ட .. குடும்பத்தோட செத்துடுவேன்னு அப்டி இப்டின்னு மெரட்னாங்க போல .. பாவம் பாஸ் .. அடுத்த நாள் காலைல ட்ரெயின் முன்னாலே குதிச்சிடுச்சு..’
நிலைகுத்திப் போயிருந்த கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது தினேஷுக்கு..
‘உனக்கு எப்படித் தெரியும்..’
‘அவங்க வீட்டாண்ட தான் பாஸ் செல்ஃபோன் கடை வெச்சிருக்கேன்… அவசரப்பட்டுட்டாங்க பாஸ் .. எத்தன வாட்டி உங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சு பாத்திருக்கேன் தெரிமா .. மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருக்கும்.. பாவம் நீங்க என்ன பண்ண முடியும் … கஷ்டம் தான் .. இந்தாங்க இதக் குடிங்க .. குடிச்சுட்டு அழுதுடுங்க .. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவும்.. மெதுவா .. மெதுவா குடிங்க பாஸ் .. பொறைக்கேறப் போவுது’
–oo0oo–
எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அவனுக்கு நினைவில்லை. சேது சொன்னதை இப்போதும் மனம் ஏற்கவில்லை .. ‘சூசைட் செய்து கொள்ளும் முடிவுக்கு அவள் எப்படி வந்தாள்? அந்தளவுக்கா வீட்டில் மிரட்டுவார்கள்? ஒரு வேளை நம்மை ஏமாற்ற மனமின்றி இப்படிச் செய்து விட்டாளா?’ நினைத்த போதே அழுகை வந்தது. அவர்கள் வீட்டிற்குப் போய் ‘இப்போ சந்தோஷமா உங்களுக்கு’ என்று கேட்க நினைத்தான். எப்படிப் போவது? அவள் வீட்டு முகவரி கூட தெரியாது.. சேதுவிடம் கேட்கலாம் .. தெரிந்தாலும் அந்தக் குடும்பத்தினரின் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பமில்லை. ‘கல்நெஞ்சர்கள்.. பாவம், எப்படித் துடித்திருப்பாள் .. தற்கொலை எண்ணங்கள் அவளை எப்படித் துரத்தியிருக்கும் ..’ ஓவென க் கத்த வேண்டும் போலிருந்தது. ‘சேது மட்டும் சொல்லாதிருந்தால், உன் மீது அனாவசியமாகச் சந்தேகப்பட்டிருப்பேன்… என் செல்லமே என்னால தானே உனக்கு இந்த நிலைமை .. நான் வராமல் இருந்திருந்தால் நீ உயிரோடு இருந்திருப்பாயே .’ என்னென்னவோ தொடர்பில்லாமல் தோன்றியது மனதில்.
நாட்கள் நரகமாகக் கழிந்தன.. கிட்டத்தட்ட இரண்டரை மாதப் பயிற்சி பாக்கி இருந்தது. வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமின்றி பயிற்சிக்கு மட்டும் சென்று வந்தான். மற்ற நேரங்களில் அறையில் அடைந்திருந்தான்.
‘ஏம்ப்பா .. இப்படியே மொடங்கிக் கெடந்தா எப்படி .. நாளைக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துடு .. மஹாலிங்கபுரத்தில காதர் சாயபு கிட்ட காமிச்சுட்டு வந்திடலாம்.’
பாட்டியின் வற்புறுத்தல் தாங்காமல், புறப்பட்டுச் சென்றான். காதர் பாய் கருப்பான மையை உச்சந் தலையில் தடவி ஏதோ மந்தரித்து, கயிறு ஒன்றை மணிக்கட்டில் கட்டி அனுப்பினார். வரும் வழியில், நெரிசலில் கார் ஊர்ந்த போது தான் கவனித்தான். வைஷு .. எதிர்புறக் கோயில் வாசலில் வைஷு .. யாருடனோ ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்தாள். கார் நின்று தினேஷ் இறங்குவதற்குள் ஆட்டோ போய் விட்டது. வைஷு உயிரோடு இருக்கிறாளா? உடனே அவளுக்கு ஃபோன் செய்தான்.. ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதாகச் செய்தி வந்தது. இரவு, சேதுவுக்கு ஃபோன் செய்தான்.
‘சரியாப் பாத்தீங்களா பாஸ் .. உங்களுக்குப் பாக்கிறவங்கல்லாம் அவங்களா தான் தெரிவாங்க …’
‘இல்ல .. நல்லா பாத்தேன் அவங்க தான்… எனக்குத் தெரியும் .. அந்த ட்ரெஸ் கூட எனக்கு ஞாபகமிருக்கு’
‘சொல்றேன்னு கோச்சிக்காதீங்க.. சாமியை வேண்டிக்கிட்டுப் படுங்க ..’
‘என்ன சொல்ற?’
‘உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையிருக்கான்னு தெரில .. சூசைட் ஆனவங்கல்லாம் இப்படித்தான் அலைவாங்க ..’
‘அலைவாங்கன்னா ?’
‘ஆவி பாஸ்.. கேள்விப்பட்டிருக்கீங்களா? அதான் படுத்தியிருக்கு உங்கள ….’
‘உளறாத .. ‘
‘இதெல்லாம் அடிக்கடி நடக்கறது தான் பாஸ் .. நான் சொல்றத சொல்லிட்டேன் .. நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம் ..’
தலை வலித்தது… கண்ணை மூடிப் படுத்தான் ..
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது .திறந்தவுடன் மல்லிகை வாசம் முகத்தில் பரவியது.. பளீரென சிரிப்புடன் நின்றிருந்தாள் வைஷு,
‘என்ன அப்படிப் பாக்கற?’
‘வைஷூ .. நீ .. எப்படி வந்த?’
‘ ஏன் வரக் கூடாதா .. பாக்கணும் போலிருந்தது வந்தேன் .. பிடிக்கலைன்னா போயிடறேன் ..’
‘ஹே .. ஹேய் .. நான் அப்படிச் சொல்லல .. ஆச்சரியமா இருக்கு..’
அறைக்குள் நுழைந்து முதுகுக்குப் பின்னால் கதவை மூடினாள் ..
‘உன்னை ஆச்சரியப்படுத்தணும்னு தான் வந்தேன் ..’ உதட்டைச் சுழித்துக் கண்ணடித்தாள்.
‘அய்யோடா .. கண்ணடிக்கக் கூடத் தெரியுமா உனக்கு?’
‘ஏன் பொண்ணுங்க கண்ணடிக்கக் கூடாதா? ஆமாம் ரூம் ஏன் இவ்வளவு சூடா இருக்கு ?’ ரிமோட்டை எடுத்து, சில்லிப்பைக் கூட்டியவள், அப்படியே கட்டிலில் சாய்ந்து தலைக்கு ஒரு கையை முட்டுக் கொடுத்துப் பார்த்தாள்.. ஏசி காற்று அவள் கூந்தலுடன் செல்லமாக விளையாடியதில் மல்லிகை மணம் கூடியது. அவன் நின்றிருந்த கோணத்திலிருந்து அவளது மார்புகள் வேகமாக ஏறி இறங்குவது அறை முழுதும் வியாபித்திருந்த மஞ்சள் நிற நைட் லாம்பின் கம்மிய ஒளியிலும் துல்லியமாகத் தெரிந்தது. அப்படியே ஓவியம் ஒன்றைப் பார்ப்பது போலிருந்தது.
‘வாவ்.. தேவதை மாதிரி இருக்கே வைஷூ..’
‘தேவதையைப் பாத்திருக்கியா இதுக்கு முன்னால?’
‘இல்ல.. இப்பத்தான் பாக்கிறேன்..’
மெலிதாகச் சிரித்தாள் .. அவனை நோக்கி கையை நீட்டினாள்.
‘அப்படின்னா இந்தத் தேவதையைச் சொந்தமாக்கிக்கணும்னு தோணலையா உனக்கு?’
இரண்டடி வைத்து அவள் கையைப் பற்றினான்..
‘காத்துக்கிட்டிருக்கேன் வைஷூ ..’
மெதுவே அவனை இழுத்து இடப்பக்கத்தில் படுக்க வைத்தவள் உரிமையாய் அவன் கால்கள் மீது தனது காலைப் படர விட்டு இதமாய் அவனது மார்பில் தலை வைத்துச் சாய்ந்து கொண்டாள்.
‘எவ்வளவு நாள் காத்துக்கிட்டிருப்பே?’
மார்பில் சாய்ந்து கொண்டிருந்த அவளது தலையை வருடிக் கொண்டே ‘எத்தனை நாள் வேணாலும் காத்துக்கிட்டிருப்பேன் ..’ என்றான்.
‘மாசக் கணக்கிலே காத்துக்கிட்டிருப்பியா?” லேசாகத் தலையை உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டுச் சிரித்தாள்.
குனிந்து அவளைப் பார்த்தான் .தலையை வருடிய கை விரல்கள் அவளது கன்னத்தில் விளையாடின.
‘இந்த பேபிக்காக எத்தனை மாசமானாலும் காத்துக்கிட்டிருப்பேன்..’
‘வருஷக்கணக்கிலே?’
‘என்னதிது குழந்தை மாதிரி?’
‘சொல்லு தினா .. வருஷக்கணக்கிலே காத்திருப்பியா?’
‘என் பட்டுச் செல்லம்மா நீ .. உனக்காக எத்தனை ஜென்மம் வேணாலும் காத்திருப்பேன்.’
அதைக் கேட்டதும் படுத்தவாறே மார்பிலிருந்து முன்னேறி அவனது முகத்தருகே முகத்தை வைத்து, ஒரு சில நொடிகள் அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவளது சுவாசம் அவன் முகமெங்கும் பரவியது. சரேலென்று இடது கையால் அவனது தலையை இன்னும் அருகே இழுத்து உதட்டில் முத்தமிட்டாள். அவளை அணைத்துக் கொள்ள முனைந்த அவனது கரங்களைத் தனது கரங்களால் இருபுறமும் விரித்து அழுத்திப் பிடித்தாள். முழுவதுமாக அவன் மீது படர்ந்து, வெறித்தனமாக முத்தமிடத் துவங்கினாள். அவளின் மார்புகள் அவனது மார்பில் அழுந்துவதை உணர்ந்தான். அவளது உதடுகளின் அழுத்தம் கூடியது .. நாக்கு அவனது நாக்கைச் சண்டைக்கு இழுத்தது.. மூச்சுக் காற்று அனலாகச் சுட்டது. முதலில் சுகமாக இருந்த அவளது உடல் பாரம், அவளது முரட்டுத்தனமான அழுத்தத்தால் கனக்கத் துவங்கியது.. அவனது உதட்டை அவள் விடவேயில்லை .. அழுத்தம் அதிகரித்தது.. மூச்சு முட்டியது .. உதடுகளை லேசாகக் கடிக்கத் துவங்கிவிட்டிருந்தாள்..அவளை விலக்க முயன்றான் .. முடியவில்லை .. மேலும் அழுத்தமாகப் படர்ந்தாள்.. நெஞ்சில் கல்லை வைத்து அழுத்துவது போல் பாரம் கூடியது .. பலம் கொண்டமட்டும் தள்ளினான் … ம்ஹூம் .. முடியவில்லை .. உதவிக்குக் கத்தலாம் என்றால் அவளது உதடுகள் இன்னும் அவனது உதடுகளை விடாமல் பற்றியிருந்த … மிகவும் முயன்று கத்த எத்தனித்தான் … ‘ம்ம்ம்ஹ் .. மாஆ ..’ முழுபலத்தையும் போட்டு, தள்ளிவிட்டு எழுந்தான் .. சுற்றும் முற்றும் பார்த்தான்..
அறைக் கதவு மூடப்பட்டிருந்தது ..டியூப் லைட் எரிந்து கொண்டிருந்தது. ஏ சி ஓடிக் கொண்டிருந்த பொழுதும் உடம்பில் வேர்வை அருவியாக வழிந்தது .. தலையை சிலுப்பிக் கொண்டான்.. இது கனவா .. அல்லது நிஜமாகவே வைஷு வந்திருந்தாளா? வந்திருந்ததா?
— o0o —
அடுத்த சில தினங்களில் ஓரிரு முறை வைஷு கனவில் வந்தாள். ஒவ்வொரு முறையும் விசித்திரமான முறைகளில் அவனை அடைய முயன்றாள். கடலில் படகில் சென்று மூழ்குவது போல், உயரமான கட்டிடமொன்றில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று அழைத்துத் தள்ளி விடுவது போல்.
“நான் தான் அப்பவே சொன்னேனே பாஸ் .. இப்பவாது நம்பறீங்களா? சின்னப் பொண்ணு சார் .. எவ்வளவு கனவு இருந்திருக்கும் .. லேசுல அடங்கிடுமா.. அவுங்க வீட்ல ஏதாவது பூஜை கீஜை பண்ணாத்தான் உண்டு ” என்றான் சேது.
சைக்கியாட்ரிஸ்டைப் பார்த்தான். அவர் முன் அமர்ந்திருந்த முப்பது நிமிடங்களில் செல் ஃபோனில் ஏழு கால்களையும், இடையிடையே கதவைத் திறந்து கொண்டு வந்து, ‘டைரக்டர் சிவா சார் வந்திருக்காரு . ஜட்ஜ் ஐயா வந்திருக்காங்க’ என்று சொன்னவர்களிடம் .. ‘வெய்ட் பண்ணச் சொல்லுங்க .. வந்துடறேன்..’ என்றும் அட்டண்ட் செய்தவர்.. இடையிடையே இவன் சொன்ன கனவுகளைக் கேட்டுவிட்டு
“நைட் படுக்கும் போது, தலைகாணியை உயரமா வெச்சுக்குங்க .. உங்களுக்கு ஏற்கனவே ‘நேசல் செப்டம் டீவியேஷன்’ இருக்க மாதிரித் தெரியுது.. மூச்சு ஃப்ரியா ..இதுல தலைகாணி இல்லாம ஃப்ளாட்டா படுத்தீங்கன்னா ப்ரைனுக்குப் போற ஆக்சிஜன் பிளாக் ஆவும் .. அதனால தான் இந்த மாதிரி ‘பானிக் அட்டாக்’, ‘நைட்மேர்’ எல்லாம் வருது .. கோயிலுக்குப் போற பழக்கம் இருந்தா சாயந்திரத்துல மலை மேல இருக்கிற கோயிலாப் பாத்து போயிட்டு வாங்க.. ஃப்ரெஷ் ஆக்சிஜன் இன்டேக் இருக்கும் .. இப்போதைக்கு இந்த ‘நேசல் பிளாக் ரிலீஃப்’ ப்ரஸ்க்ரைப் பண்றேன் .. இம்ப்ரூவ்மென்ட் இல்லைனா சின்னதா செப்டம் கரெக்ஷன் சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும் … பாத்துக்கலாம் .. ஒரு வாரத்துல வந்து பாருங்க” என்று அனுப்பி வைத்தார்.
மீண்டும் ஒரு தடவை வைஷுவை அந்த நபருடன் பார்க்க நேர்ந்தது. இந்த முறை தாம்பரம் ரயில் நிலையத்தில் .. இவன் அமர்ந்திருந்த வண்டி பிளாட்பாரத்தை விட்டு கிளம்பி நகர்கையில், வைஷு படிக்கட்டில் இறங்கி வருவது தெரிந்தது .. அவசர அவசரமாக இருக்கையை விட்டு எழுந்து வந்து இறங்க எத்தனிப்பதற்குள் வண்டி வேகம் பிடித்திருந்தது ..
“அடுத்த டேஷன்ல எறங்கி வந்துக்கோ சார் .. இப்போ குத்ச்ச்சீன்னா வைட்டிக்கும் .. எலும்பு கூட தேறாது … ” என்றார் கதவுக்கருகே குத்தங்காலிட்டு அமர்ந்திருந்தவர்.
தொடர்ந்து இரவுகளில் கனவுகள் மிரட்டியது. தளர்ந்து போனான் தினேஷ். பயிற்சி எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என அமெரிக்காவுக்குத் திரும்ப முடிவெடுத்தான்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்ல ட்ரெயினுக்காக காத்திருந்தான். இரவு எட்டு மணிக்கு சேதுவைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தான். வீட்டுக்குப் போய்விட்டு போனால் லேட்டாகி விடும் . இப்பவே போனால் ஏழேகாலுக்குள் போய் பாரில் அவனுக்காகக் காத்திருக்க வேண்டும். அதற்கு ரயில் நிலையமே மேல் என்று எச்சில் கறை அதிகம் இல்லாத இடத்தில் இருக்கையைத் தேடி அமர்ந்தான். கையிலிருந்த செல்போனில் மூழ்கி எதையோ படித்துக் கொண்டிருந்த போது யாரோ வெகு அருகில் அமர்வது போலிருந்தது.
“ஹலோ தினா. எப்படி இருக்க?”
திரும்பினான்.. வைஷு .. முகம் வெளிறி வாடிப் போயிருந்தாள்.
“ஹே.. நீ எப்படி .. ப்ளீஸ்.. லீவ் மீ அலோன் ” எழ முயற்சித்தான்
“ஐயம் சாரி தினா … நான் செஞ்சது தப்புத் தான் தினா .. நீ கோபப்படறது நியாயம் .. ஆனா ..”
“திரும்பத் திரும்ப என்னை ஏன் துரத்தற.. நான் என்ன தப்பு பண்ணேன் உனக்கு ..”
“நீ தப்பு பண்ணல தினா .. நான் தான் தப்பு பண்ணிட்டேன் ..மொதல்ல உக்காரு .. உன்னைப் பார்த்து உண்மையைச் சொல்லாம, எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா உனக்கு ..”
“ஸீ.. நீ இங்க இருக்கிறது மத்தவங்க கண்ணுக்குத் தெரியுதான்னு எனக்குத் தெரியல .. நான் பைத்தியக்காரன் மாதிரி தனியாப் பேசறேன்னு நெனச்சுக்குவாங்க .. ஏற்கனவே நீ செத்துப் போனப்புறம் பாதி மெண்டலா தான் இருக்கேன் .. இதுலே நீ ஆவியா வேற வந்து தொந்தரவு பண்ணணுமா.. ப்ளீஸ் இங்கிருந்து போயிடு.. என்னை விட்டுடு “
“செத்துப் போயிட்டேனா ? ஆவியா ? என்ன உளர்ற தினா.. நான் சாகல.. நிஜமா உன் கண்ணு முன்னாடி நிக்கிறேனே தெரியலையா .. “
“இப்படி எத்தனை தடவை தான் ஏமாத்துவே வைஷு ..”
“நான் ஏமாத்தலை தினா .. இங்கப் பாரு..குடிச்சிருக்கியா.. ” வேகமா எழுந்து அருகிலிருந்த ஸ்டாலுக்குச் சென்றவள், இரண்டு லெமனேடுகள் வாங்கி வந்து ஒன்றை அவனது கைகளில் திணித்தாள் “கொஞ்சம் குடி..”
கோபம் தலைக்கேற லெமனெடை தூக்கி அடித்து எழுந்து கத்தினான் .. “லீவ் மீ வைஷு..லீவ் மீ.. “
“ன்னாம்மா ஆச்சு .. ஏன் இப்படி கத்தறாரு .. சண்டைனா வீட்லயே வெச்சுக்க வேண்டியதானே..” சின்னதாய்க் கூட்டம் சேர்ந்து விட்டது.
“வீட்ல சண்டை போட நேரமேது.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஷிஃப்டுக்குப் போறதா இருக்கும் .. லட்சம் லட்சமா சம்பாதிச்சு பேங்க்ல போட்டு வெச்சுட்டு ரயில்வே ஸ்டேஷன்ல முட்டிக்குதுங்க ..”
“அய்யோ அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கண்ணா .. லேசா குடிச்சிருக்கார் போல .. அதான் .. ” கைத்தாங்கலாக அவனை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று அமரவைத்தாள்.
“இதுல அது வேறயா .. பாத்துக் கூட்னு போம்மா ..” என்றபடி கலைந்தனர்.
“இப்ப சந்தோஷமா உனக்கு .. அவன் அப்பவே சொன்னான் .. நீ ஆவியா துரத்துவேன்னு .. நான் தான் நம்பலை .. “
“யாரு ..”
“உன் சாவை நேர்ல பாத்தவன் ..”
“என்ன சொன்னான் ..” என்றாள்.
தினேஷ் சொன்னது அத்தனையையும் கேட்ட வைஷு, அவனது கைகளை பற்றிக் கொண்டு அழுதாள். தினேஷுக்கு அவள் நிஜமா ஆவியா என்று இன்னமும் புரியவில்லை. திடீரென அழுகையை நிறுத்தி அவனைப் பார்த்தவள் … அவனது முகத்தை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்து .. “என் கண்ணைப் பாரு தினேஷ். உயிரோடத் தான் இருக்கேன்.. நான் சாகலை.. சாகடிச்சுட்டேன்..”
“ஹேய் ,,”
“அந்தக் கொலைக்குப் பயந்து தான் வீட்டை விட்டு வெளியே வராம, உன்னைக் கூட பாக்க வராம, அடைஞ்சு கிடந்தேன்..”
“நீ கொலை பண்ணிட்டியா?”
“ஆமாம் தினா… ரொம்ப நாளா அவன் தினமும் என்னை ஃபாலோ பண்ணியிருந்திருக்கான் .. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நான் அப்பப்போ நோட்டீஸ் பண்ணேன் .. காலையில ரயில்வே ஸ்டேஷன்ல காத்துக்கிட்டுருக்கிறது.. அப்பப்ப என்கிட்டே வந்து பேச முயற்சிக்கிறதுன்னு தொல்லை கொடுத்தான் . “
தினேஷின் செல்ஃபோன் அடித்தது .. சேது தான் கூப்பிட்டான். அவனிடம் பேசும் நிலையிலவன் இல்லை. கட் செய்தான்
“ஒரு நாள் காலைலே ஸ்டேஷன்ல நிக்கும் போது வந்து மிரட்டினான் ..அவன் என்னை லவ் பண்றதாவும் மறுநாள் நான் அதுக்கு பதில் சொல்லனும்னும் மிரட்டினான் .. எனக்கு உன்கிட்ட இதையெல்லாம் சொல்லலாமா வேணாமான்னு தெரியல .. நைட் வீட்டுக்குப் போனதுக்கப்புறம் அப்பா கிட்ட சொல்லிடலாம்னு இருந்தேன் .. அன்னைக்குச் சாயந்திரம் ஹாஸ்பிட்டல்லேருந்து கிளம்பறத்துக்குள்ள இருட்டி விட்டிருந்தது ..”
சின்னதாய் விசும்பினாள்.
“நான் ட்ரையினைப் பிடிக்க டிராக் ஓரமா நடந்து வந்துக்கிட்டிருந்தேன் .. எங்கிருந்து என்னை ஃபாலோ செய்து வந்தான் என்று தெரியவில்லை எங்கடி சுத்திட்டு வர இவ்வளவு நேரம் .. நாளைக்குக் காலைல ஸ்டேஷன்ல காத்துகிட்டு இருப்பேன் .. பதிலோட வரலை.. வீட்டுக்கெல்லாம் வரமாட்டேன் .. அங்கேயே வெட்டிருவேன்னு சொன்னான் .. நான் எதுவும் கேட்டுக்காம முன்னாடி நடந்துகிட்டு இருந்தேன்.. ஆள் நடமாட்டம் வேற இல்ல .. அதைப் பயன்படுத்திக்கிட்டு என்னடி சொல்லிகிட்டே இருக்கேன் பதில் சொல்ல மாட்டேங்கிறன்னு என் தோளைப் பிடித்தான் .. எங்கிருந்து எனக்கு அவ்வளவு கோபம் வந்ததுன்னு தெரியலை.. தோள்ல மாட்டியிருந்த ஹாண்ட் பேக்கை சுழட்டி அடிச்சேன்.. பேக்ல இருந்த லேப்டாப்பா, என்னன்னு தெரியல நெத்தியில பட்டிருக்கு .. சுருண்டு விழுந்துட்டான்.”
“ஓ மை காட் .. என்ன பண்ணின அவனை?”
“மூச்சு நின்னு போயிருந்தது . ஒரு கணம் என்ன பண்றதுன்னு தெரியல .. தூரத்திலே ட்ரெயின் வர சத்தம் கேட்டது .. டக்குனு டிராக் பக்கத்திலே விழுந்து கிடந்த அவனை டிராக்ல இழுத்துப் போட்டேன் … என் ஹேண்ட் பேக்கை கழட்டி டிராக்குலே போட்டுட்டு பிளாட்பாரத்துக்கு ஓடிப் போனேன் .. ஒருத்தன் என்னைத் துரத்தி பேக்கை பறிச்சிக்கிட்டு ஓடிட்டான்னு சொன்னேன் …
அதுக்குள்ளே பிளாட்பாரத்துக்கு வந்த அந்த ட்ரெய்ன் எஞ்சின் ட்ரைவர், யாரோ ஒருத்தன் குடிச்சிட்டு டிராக்ல விழுந்து கெடந்ததாவும் உடனே ட்ரெயினை நிறுத்த முடியாததால் வண்டி அவன் மேல ஏறிட்டதாகவும் கம்ப்ளெயிண்ட் கொடுத்தார்.. யாரும் நான் செஞ்ச கொலையைப் பாக்கலனாலும் எனக்கு ரொம்ப பயமா இருந்தது .. அப்பா அம்மா கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லிட்டேன்
…அடுத்த நாள் ஜுரம் வந்துடுச்சு .. பயத்திலே நடைப்பிணம் மாதிரி ஆயிட்டிருந்தேன் .. அவங்க ஒரு மாசமா எங்கயும் போகவிடாம, டி வி கூடப் பாக்க விடாம .. பக்கத்திலேயே இருந்தாங்க .. என்னைக்காவது சாயந்திரத்திலே பக்கத்திலே இருக்க கோயிலுக்கு மட்டும் கூட்டிட்டுப் போவாங்க … போன வாரத்தில் ஒரு நாள் ஹாஸ்பிடலுக்குப் போக ஆரம்பிச்சேன் .. அப்பா கூட வருவாரு .. இன்னைக்குத் தான் முதல் தடவையா தனியா வர சந்தர்ப்பம் கிடைச்சுது ..”
“ஓ மை காட் .. நீ செஞ்சது தப்பில்ல வைஷூ .. ஹி டிசர்வ்ஸ் டு டை.. தட் பாஸ்டர்ட் .. டு யூ நோ ஹிஸ் நேம்?”
“ம்ம்.. சேது.”
– மர்மயோகி