தீபாவளி ஃப்ளாஷ்பேக்
கொளுத்திப் போட்ட பட்டாசு
கதைகள் பலவும் சொல்லிடுது…..
குழந்தைப் பருவ தினங்களிலே
குதூகலம் நிறைந்த தீபாவளி….
மாதம் இரண்டு முன்னமேயே
மாறாது மலர்ந்திடும் கனவதுவே….
முழுதாய் நீளும் கால்சட்டையோ
முன்னம் போலே அரைக்காலோ
தந்தை சற்று மனம்வைத்து
தனக்குப் பிடித்ததைத் தருவாரோ?
விரும்பி வாங்கிய துணிமணியை
விரைவாய் டெய்லரும் தைப்பாரோ…
தினமும் அவரின் கடைசென்று
திரும்பி வந்தோம் வெறுங்கையாய் !!
முந்தைய தினத்தின் நள்ளிரவில்
முடித்தே கொடுக்க, மகிழ்ந்தோமே !!
தெருவில் முதலாய் நம்வீட்டில்
தெறிக்க வேண்டும் பட்டாசு
வெறியாய் முதல்நாள் இரவினிலே
விழித்தே இருந்தது மறக்கலயே !!
மழையில் பதத்த பட்டாசை
மறுபடி வெடிக்கும் ஆசையிலே
அடுப்பில் வைத்துக் காயவைக்க
அடுக்களை வெடித்தது மறக்கலயே !!
விடிந்தும் விடியாக் காலையிலே
விழிக்கும் நமது தலையினிலே
எண்ணெய் தோய்ந்த வாசனையே
எண்ணம் விட்டு நீங்கலயே !!
தேன்குழல் ஜாமூனென்று பட்சணங்கள்
தேங்காய்த் துவையலுடன் இட்லியும்
தொடக்க நிகழ்ச்சியாய்க் காலையிலே
தொலைக்காட்சி காட்டும் நல்லுரையே !!
காலம் பலவும் உருண்டோடி
காற்றாய்ப் பறந்து போயிடினும்
தீபாவளி தினமது வருகையிலே
தீர்க்கமாய் நினைவும் திரும்பிடுதே !!!
வெ. மதுசூதனன்.